கோயில்களின் உறுதித் தன்மையை ஆராய குழு அமைப்பு

கடலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களின் உறுதித் தன்மையை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டத்திலுள்ள கோயில்களின் உறுதித் தன்மையை ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது.
 கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலில் மண்டபம் இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்திலுள்ள அனைத்துக் கோயில்களிலும் கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய தமிழக அரசு குழுவை அமைத்துள்ளது.
 அதன்படி, கடலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1,252 கோயில்களிலும் ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி தெரிவித்தார்.
 இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:
 இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் தலைமையில், உதவிப் பொறியாளர், பொதுப் பணித் துறை, தொல்லியல் துறை, மின்சாரத் துறை அலுவலர்கள் இந்தக் குழுவில் இடம் பெறுவார்கள்.
 அவர்கள் அனைத்துக் கோயில்களிலும் ஆய்வு மேற்கொள்வார்கள். இதற்காக, ஒவ்வோர் துறைக்கும் கடிதம் அனுப்பப்பட்டு அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களை ஒருங்கிணைத்து விரைவில் பணி தொடங்கம்.
 மேலும், கடலூர் மாவட்டத்தில் கோயில்களில் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், 110 கோயில்களில் முன்னெச்சரிக்கை (அலாரம் அடிக்கும்) கருவி பொருத்தப்பட்டுள்ளது.
 தற்போது, கூடுதலாக 70 கோயில்களில் இந்தக் கருவியைப் பொருத்த ரூ. 9 லட்சத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. அதே போல, 52 கோயில்களில் தீயணைப்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளன. மற்ற கோயில்களிலும் கருவிகளைப் பொருத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
 அனைத்துக் கோயில்களிலும் மண் நிரப்பிய வாளிகளை தீயணைப்புக் கருவியாகப் பயன்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 விருத்தாசலம் விருதகிரீஸ்வரர் கோயிலில் 4 கால் மண்டபம் அருகே கோயிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதே போல, திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோயில் அருகே உள்ள கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில் குளத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனை அகற்றுவதற்கு காவல் துறையின் உதவியை நாடியுள்ளோம். வருகிற 23- ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com