ஆலைக் கழிவுநீர் கலப்பு விவகாரம்: கெடிலம் ஆற்றில் மத்திய சுற்றுச்சூழல் துறை ஆய்வு

கெடிலம் ஆற்றில் ஆலைக் கழிவுநீர் கலக்கிறதா என மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

கெடிலம் ஆற்றில் ஆலைக் கழிவுநீர் கலக்கிறதா என மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
 கடலூர் மாவட்டம் வழியாகப் பாயும் கெடிலம் ஆற்றின் குறுக்கே, கடலூர் கம்மியம்பேட்டையில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் அடிக்கடி மீன்கள் செத்து மிதந்தன. நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரானது நேரடியாக தடுப்பணையில் கலப்பதே மீன்கள் உயிரிழப்புக்குக் காரணமென பல்வேறு அமைப்புகளும் குற்றம்சாட்டி வந்தன.
 இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவின் பேரில், சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் கெடிலம் தடுப்பணையை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை சமர்ப்பித்தார். அதனடிப்படையில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் இந்த தடுப்பணையை ஆய்வு செய்ய முடிவு செய்தது. அதன்படி அமைச்சக உயர் அதிகாரி ப்ரிஜாலால் செவ்வாய்க்கிழமை கடலூர் வந்தார். பின்னர் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு அலுவலர்களுடன் சென்று நெல்லிக்குப்பம் ஆலையில் தண்ணீர் வெளியேறும் பகுதியை பார்வையிட்டார். இதையடுத்து, பில்லாலியில் கழிவுநீரால் பாதிக்கப்பட்டு வரும் விவசாய நிலங்களையும், கம்மியம்பேட்டையில் உள்ள கெடிலம் தடுப்பணையையும் பார்வையிட்டார். மேலும், 3 இடங்களிலும் தண்ணீரின் மாதிரிகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டது.
 இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவித்ததாவது: தண்ணீரின் மாதிரி ஆய்வுகள் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு சமர்ப்பிக்கப்படும். இந்தக் குழுவினர் புதன்கிழமையும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் மு.மருதவாணன் கூறியதாவது: ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் சுமார் 4 ஆயிரம் குடியிருப்புகள், 300 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டு வருகிறது. கெடிலம் தடுப்பணை தண்ணீர் தாவரம், உயிரினம் வாழ்வதற்கான தண்ணீராக இல்லையென பல அறிக்கைகள் தெரிவித்துள்ளதை குழுவினரிடம் எடுத்துக் கூறியுள்ளோம் என்றார்.
 இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் மு.நிஜாமுதீன் கூறியதாவது: கெடிலம் ஆறு பாதிப்பு குறித்த புகார்தாரரில் நுகர்வோர் கூட்டமைப்பும் ஒருவராக இருந்தும் ஆய்வின் போது தகவல் தெரிவிக்காதது கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து அவர்களது கருத்தினைக் கேட்டறிய வேண்டுமென மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்துக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தும் இவ்வாறு நடைபெற்றுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை கேட்டறிய வேண்டும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com