கடலூர் மாவட்டத்தில் 346 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு: ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் 346 பேருக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் 346 பேருக்கு எய்ட்ஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
 மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு - கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சி கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்து சிறப்பான மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள், எச்ஐவி தடுப்புப் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய நிறுவனங்கள், கருவுற்ற தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
 பின்னர் அவர் பேசியதாவது: ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக் கருகத்தாக "வெளிப்படை தன்மை, பொறுப்புணர்வு - பங்களிப்பு மூலம் எய்ட்ஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ளல்' அறிவிக்கப்பட்டது. இதன் குறிக்கோள் எய்ட்ஸ் பாதிப்பால் சமூகப் புறக்கணிப்பு இல்லாமல் பாதுகாப்பதாகும்.
 கடலூர் மாவட்டத்தில் 2006 -ஆம் ஆண்டு முதல் நவம்பர் 2017 வரை 9,50,955 பேர் எச்ஐவி பரிசோதனை செய்து கொண்டதில் 6,234 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 2016 - 17 நிதியாண்டில் பொதுப் பிரிவினர்களில் எச்ஐவி பரிசோதனை செய்தவர்கள் மொத்தம் 70,345 பேர்களாவர். இதில், ஆண்கள் 40,863 பேர். பெண்கள் 29,406 பேர்.
 திருநங்கைள் 76 பேர், கருவுற்ற தாய்மார்கள் 36,112 பேர்களாவர். இவர்களில், எச்ஐவி தொற்றுள்ளவர்களாக கண்டறியப்பட்டவர்களில் கருவுற்ற தாய்மார்கள் 11, ஆண்கள் 196, பெண்கள் 137, திருநங்கை 2 பேர்களாவர்.
 ரத்த வங்கியின் மூலம் 12,535 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. 168 எச்ஐவி தொற்றுள்ள மற்றும் பாதிப்புக்கு உள்ளான மாணவர்களுக்கு படிப்புக்கான உதவித் தொகையாக ரூ. 3.80 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.
 மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் சு.கலா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவகர்லால், துணை இயக்குநர் (காசநோய்) சு.கருணாகரன், மருத்துவர்கள் ஊ.ஜனனி, சாய்லீலா, தொண்டு நிறுவன தலைவர்கள் ஜெயக்குமார் டேனியல், ச.சத்தியபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். எய்ட்ஸ் தடுப்பு - கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் க.கதிரவன் வரவேற்றார். கடலூர் ஏஆர்டி மையத்தின் மருத்துவர் சீ.ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com