அனைத்துத் தரப்பினர் கொண்டாடிய சமத்துவப் பொங்கல்!

கடலூரில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து 21 பானைகளில் பொங்கலிட்டு சமத்துவப் பொங்கலை சனிக்கிழமை கொண்டாடினர்.

கடலூரில் அனைத்துத் தரப்பினரும் இணைந்து 21 பானைகளில் பொங்கலிட்டு சமத்துவப் பொங்கலை சனிக்கிழமை கொண்டாடினர்.
ஜாதி, மத பேதங்களைக் கடந்து கொண்டாடப்படும் திருவிழாக்களில் ஒன்றாக பொங்கல் பண்டிகையும் விளங்குகிறது. எனவே, இந்தப் பொங்கலை சமத்துவப் பொங்கல் பண்டிகையாக அனைத்துத் தரப்பினரும் இணைந்து கொண்டாடும் வகையில், பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
அதன்படி, கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, கோண்டூர் பாரத் நகர் உரிமையாளர்கள் நலச் சங்கம் ஆகிய சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கோண்டூரில் உள்ள மக்கள் ஒற்றுமைத் திடலில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கூட்டமைப்பின் தலைவர் பி.வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், பல்வேறு நகர்களிலுள்ள அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று 21 பானைகளில் பொங்கலிட்டனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பொங்கலிட்டார். பின்னர், பொங்கல் படையலிடப்பட்டு, பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நகரைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பரத நாட்டியம், போக் நடனம், யோகா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்டமைப்பின் பொதுச் செயலர் மு.மருதவாணன், சங்கத்தின் தலைவர் எஸ்.ரெங்கநாதன், செயலர் ஆர்.ஸ்ரீதர்குப்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, ஓய்வு பெற்ற ஆசிரியை எஸ்.சரளா வரவேற்றார்.
சங்கத்தின் அமைப்புச் செயலர் ஜெ.தில்லைநாயகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com