திருவந்திபுரத்தில் மஞ்சு விரட்டு: தேவநாதசுவாமி மாடு விரட்டினார் 

திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் தேவநாதசுவாமி பங்கேற்று மாடுகளை விரட்டும் உற்சவம் நடைபெற்றது.

திருவந்திபுரம் கெடிலம் ஆற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் தேவநாதசுவாமி பங்கேற்று மாடுகளை விரட்டும் உற்சவம் நடைபெற்றது.
 பொங்கல் பண்டிகையின் 2-ஆம் நாள் விழாவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
 இந்த விழாவை மனிதர்கள் மட்டுமன்றி, கடவுளும் கொண்டாடுவார் என்பதற்குச் சான்றாக, கடலூர் அருகே உள்ள நடுநாட்டுத் திருப்பதிகள் இரண்டில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சிறப்பு நிகழ்வு நடைபெறும்.
 அதன்படி, மாட்டுப் பொங்கல் நாளான திங்கள்கிழமை பாரம்பரிய முறைப்படி மஞ்சு விரட்டு எனப்படும் மாடு மிரட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.
 இதையொட்டி, அன்று மாலையில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் தேவநாதசுவாமி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்கிட திருவந்திபுரம் கெடிலம் ஆற்றுக்குள் சுவாமி வெள்ளிக் குதிரை வாகனத்தில் சென்றார். அப்போது, திருவந்திபுரம், தொட்டி, பில்லாலி, சாலைக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஏற்கெனவே மாட்டுப் பொங்கலிட்டவர்கள் தங்களது மாடுகளை அலங்கரித்து ஆற்றுக்குள் ஓட்டி வந்திருந்தனர். அப்போது, மாடுகள் முன்பாக தேவநாதசுவாமி எழுந்தருள சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, தேவநாத சுவாமி மாடுகளை விரட்டிப் பிடிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
 அதற்காக மேளதாளங்கள் முழங்கிட வெள்ளிக் குதிரையிலிருந்து சுவாமி மாடுகளை பிடிப்பதற்காக, மாடுகளை நோக்கி பல்லக்கு வேகமாக நகர்த்தி கொண்டு செல்லப்பட்டது. அப்போது, கூடியிருந்தவர்கள் மாடுகளை விரட்டிப் பிடிக்கும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இளைஞர்கள் தங்களது வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் மாடுகளை துரத்திப் பிடித்தனர். இதற்காக, சில மாடுகளின் கொம்புகளில் கரும்பு, துணி ஆகியவை கட்டப்பட்டிருந்தன.
 பின்னர், தேவநாதசுவாமி வீதி உலா சென்றார். அப்போது, பொதுமக்கள் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து சுவாமி கோயிலில் எழுந்தருள சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
 இந்த நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com