நெல் பயிரில் பூச்சித் தாக்குதல் மேலாண்மை

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு, தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்தனர்.

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு, தண்டுத் துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குநர் ப.சின்னக்கண்ணு வெளியிட்டசெய்திக் குறிப்பு:
 குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 5,824 ஹெக்டர் பரப்பளவில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் பயிரில் இலைச் சுருட்டுப் புழு, தண்டுத் துளைப்பான் தாக்குதல் சில இடங்களில் காணப்படுகின்றன.
 இலைச் சுருட்டுப் புழு தாக்குதலால் இலைகள் நீளவாக்கில் மடிந்து புழுக்கள் அதனுள்ளே இருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சையங்களைச் சுரண்டுவதால் வெள்ளையாக மாறிக் காய்ந்திருக்கும். அதிக தாக்குதலின் போது, நெல் வயல் முழுவதும் வெள்ளையாக காய்ந்தது போலக் காணப்படும். தழை பருவத்தில் 10 சதவீதமும், பூக்கும் பருவத்தில் 5 சதவீதமும் இலையில் சேதம் ஏற்பட்டிருந்தால், கட்டுப்பாடு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
 அதேபோல, தண்டுத் துளைப்பான் காரணமாக இலையின் நுணியில் பழுப்பு நிற முட்டைகள் காணப்படும். தழைப் பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து உட்கொள்வதால் அதன் நடுபகுதி காய்ந்துவிடும். வளர்ச்சி அடைந்த பருவத்தில் முழு தானிய கதிரும் காய்ந்து வெண்கதிர் அறிகுறி ஏற்படும். பழுப்பு நிற அந்துப் பூச்சிகள் வயலில் காணப்படும். 25 சதவீதம் குருத்து காய்தல் அல்லது ஒரு சதுர மீட்டருக்கு 2 முட்டைக் குவியல் இருந்தால் கட்டுப்பாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
 கட்டுப்படுத்தும் முறைகள்...
 தேவைக்கு அதிகமாக உரங்கள் இடுவதைத் தவிர்க்க வேண்டும். வரப்புகளைச் சீராக்கி வைத்தல், புல் இனங்களை நீக்க வேண்டும். வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவீதம் (25 கிலோ/ஏக்கர் என்ற அளவில் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டுதல்) அல்லது வேப்ப எண்ணெய் 0.03 சதவீதம் அல்லது ரசாயன பூச்சிக் கொல்லிகளான குளோர்பைரிபாஸ் 1,250 மி.லி /ஹெக்டர் அல்லது கார்டாப்ஹைட்ரோ குளோரைடு
 50 மி.லி ஒரு கிலோ/ஹெக்டர் என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
 பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளிக்கும் போது, சரியான மருந்துகளைச் சரியான அளவில் தெளித்தல் வேண்டும். காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு மேலும் தெளித்தல் வேண்டும். மருந்துடன் பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீரைக் கலந்து தெளிக்க வேண்டும்.
 மருந்து தெளிப்பவர் கையுறை, காலுறை, மூக்கு- வாய் கவசம் அணிந்து தெளித்தல் வேண்டும்.
 காற்று வீசும் திசையிலேயே தெளித்தல், தரமற்ற, தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தவிர்த்தல், கைத்தெளிப்பான் எனில், 16 டேங்க் அளவிலும், விதைத் தெளிப்பான் எனில், 10 டேங்க் என்ற அளவிலும் தெளிக்க வேண்டும்.
 மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com