வாக்குச்சாவடிகள் மறுவரையறை பட்டியல்: அரசியல் கட்சியினர் கருத்து தெரிவிக்கலாம் 

வாக்குச் சாவடிகள் மறுவரையறை குறித்து அரசியல் கட்சியினர் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.

வாக்குச் சாவடிகள் மறுவரையறை குறித்து அரசியல் கட்சியினர் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
 வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்யப்பட்ட பட்டியல் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக கடந்த 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கிராமப்புறங்களில் ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களும், நகர்ப்புறங்களில் 1,400 வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் வாக்குச்சாவடிகள் திருத்தியமைக்கப்பட்டன. இந்தப் பட்டியல் தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கருத்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு கோட்டாட்சியர் அலுவலகத்திலும் திருத்தம் செய்யப்பட்ட வாக்குச் சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.
 கடலூரில் சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் திருத்தம் செய்யப்பட்ட வாக்குச் சாவடிகள் மறுவரையறை பட்டியலை தனது அலுவலகத்தில் வெளியிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு செய்தார். அதன்படி, கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஏற்கெனவே இருந்த 228 வாக்குச் சாவடிகள் மாற்றமின்றி தொடர்கின்றன. சுப்புராயலுநகரிலிருந்த வாக்குச்சாவடி கட்டடம் பழுது காரணமாக, நெடுஞ்சாலை நகருக்கு வாக்குச் சாவடி மாற்றப்பட்டுள்ளது.
 நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 226-லிருந்து 231-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. 7 இடங்களில் வாக்குச் சாவடி மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்த 251 வாக்குச் சாவடிகள் 255-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. 12 இடங்களில் வாக்குச் சாவடி மையங்கள் மாற்றப்பட்டுள்ளன. பண்ருட்டி தொகுதியில் இருந்த 251 வாக்குச் சாவடிகள் 257-ஆக உயர்த்தப்பட்டுள்ளன. 9 இடங்களில் வாக்குச் சாவடி மாற்றப்பட்டுள்ளன.
 இந்தக் கூட்டத்தில், அதிமுக நகரச் செயலர் ஆர்.குமரன், திமுக நகரச் செயலர் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் நிர்வாகி என்.குமார், பாஜக நிர்வாகி வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி வி.குளோப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இதேபோல விருத்தாசலம் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் சார்-ஆட்சியர் ச.சந்தோஷினிசந்திரா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், விருத்தாசலம், திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகள் விவரம் வெளியிடப்பட்டது. விருத்தாசலத்தில் 10 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டன. 11 வாக்குச்சாவடிகள் மாற்றப்பட்டன. திட்டக்குடியில் 6 வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, 5 வாக்குச்சாவடிகள் மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவரங்கள் மீது அரசியல் கட்சியினர் மட்டும் வருகிற 17-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com