குடிநீர்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் மறியல்

குறிஞ்சிப்பாடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

குறிஞ்சிப்பாடி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
 குறிஞ்சிப்பாடி ஒன்றியம், கீழூர் ஊராட்சிக்கு உள்பட்ட பெரியகோயில்குப்பம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
 இவர்களுக்கு அங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், பெரியகோயில்குப்பம் கிராமத்திலும் கடந்த 3 மாதங்களாக குடிநீர் பிரச்னை உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
 இதனால், பாதிக்கப்பட்ட அந்த கிராமத்தைச் சேர்ந்த 40 பெண்கள் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் காலிக் குடங்களுடன் கண்ணுதோப்பு பாலம் அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது கிராம மக்கள் கூறியதாவது: கடந்த 3 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.
 இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சாலை மறியல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனர்.
 தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளர் ரவீந்திரராஜ், குறிஞ்சிப்பாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 குடிநீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர். இதையேற்று கிராம மக்கள் கலைந்துச் சென்றனர்.
 மறியலால் அந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து தடைபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com