சுருக்குமடி வலை பயன்பாட்டை கண்காணிக்க குழு அமைப்பு

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலை பயன்பாட்டை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
 கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு வசிப்போரில் சுமார் 10 ஆயிரம் பேர் மீன்பிடித்தலையும், அதைச் சார்ந்த தொழில்களையும் செய்து வருகின்றனர். சுருக்குமடி வலைகளை சிலர் பயன்படுத்தும்போது, ஒருவருக்கு அதிக லாபமும், மற்றவர்களுக்கு சொற்ப வருமானமும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், மீனவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு அது கிராமங்களுக்கு இடையேயான மோதலாக மாறியது. இந்த மோதலில் சோனங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் பஞ்சநாதன் என்பவர் தேவனாம்பட்டினம் மீனவர்களால் அண்மையில் கொலை செய்யப்பட்டார்.
 இதனால், தமிழக அரசால் 2007-ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்ட சுருக்குமடி வலைப் பயன்பாட்டை கடலூர் மாவட்டத்தில் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்ற கோஷம் ஒலிக்கத் தொடங்கியது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடத்திய பல்வேறு பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்ததால் சுமார் 45 மீனவ கிராமத்தினர் இந்தப் பிரச்னைத் தொடர்பாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
 இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அரசிடம் பதிவு செய்யாத படகுகளுக்கு நோட்டீஸ் விநியோகித்தல், கடலுக்குள் சென்று சுருக்குமடி வலை பயன்பாடு தொடர்பாக ஆய்வு நடத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தது. இந்தப் பிரச்னையில் தற்போது மாவட்ட ஆட்சியர் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து ஆட்சியரக வட்டாரங்கள் கூறியதாவது: சுருக்குமடி வலைப் பயன்பாட்டை பல்வேறுத் துறையினருடன் இணைந்து கண்காணிக்க சார்-ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை, கடலோரக் காவல் படை, வனத் துறை, காவல் துறை ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இந்தக் குழுவினர் தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்வர்.
 மேலும், மீனவர்களிடம் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்ட 230 பெரிய படகுகளில் 138 பேருக்கு "வாக்கி-டாக்கி' வழங்கப்பட்டுள்ளது. மேலும், 711 சிறிய ரக படகுகளில் 679 பேருக்கு சிறிய ரக கையடக்க "வாக்கி-டாக்கி' வழங்கப்படுகிறது. இதன் மூலமாகவும் எங்கு, என்னென்ன வலைகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைத் தெரிந்துக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com