கட்செவி அஞ்சலில் அவதூறு கருத்து: கடலூர் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு; 6 குடிசைகள் சேதம்

கடலூர் அருகே கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், வியாழக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 6 குடிசைகள் சேதமடைந்தன.

கடலூர் அருகே கட்செவி அஞ்சலில் அவதூறு பரப்பியதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், வியாழக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் 6 குடிசைகள் சேதமடைந்தன.
 கடலூர் அருகே உள்ள சேடப்பாளையம் குளத்துமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (24). அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தஜோதி (25).
 இருவரும் உறவினர்கள் என்றபோதிலும், முன்விரோதம் காரணமாக தனித் தனி குழுக்களாக இயங்கி வந்தனர். மேலும், இருதரப்பினரும் மற்றவர் குடும்பம் குறித்து கட்செவி அஞ்சலில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு தகராறில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ஆனந்தஜோதியும், அவரது தரப்பினரும் விக்னேஷின் வீட்டுக்குச் சென்று அவரது அண்ணன் கார்த்திக், சித்தி சுமதி (40) ஆகியோரை தடியால் தாக்கியதில் இருவரும் காயமடைந்தனர்.
 அவர்கள் கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 இந்த நிலையில் அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் ஆனந்தஜோதியின் தாய் மங்களத்தின் (53) குடிசை வீடு திடீரென எரிந்துகொண்டிருந்ததை அந்தப் பகுதியினர் பார்த்து அவரை மீட்டனர். எனினும், அந்தக் குடிசையிலிருந்த பொருள்கள் தீயில் கருகியது. மேலும், அங்கிருந்த எரிவாயு உருளை வெடித்தது. இதில் பக்கத்து வீட்டில் வசித்த கற்பகம், செல்வம், பச்சையம்மாள், மகேந்திரன், மாரியம்மாள் ஆகியோரது குடிசைகளுக்கும் தீ பரவியது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே ஓடிவந்து தப்பினர்.
 அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த கால்நடைகளை இளைஞர்கள் மீட்டனர். இருந்தபோதிலும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 50 கோழிகள் தீயில் கருகின. அருகிலிருந்த தென்னந்தோப்புக்கும் தீ பரவியது.
 இதுகுறித்து தகவலறிந்து கடலூரிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதிகாலை 4 மணி வரை போராடி தீயைக் கட்டுப்படுத்தினர். இந்தச் சம்பவத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
 சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தனித் தனியாக வழக்குப் பதிவு செய்து விக்னேஷ், முகுந்தன், விஜயகுமார், செந்தில்குமார் (33) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இதில் தங்கள் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கற்பகம் புகார் அளித்துள்ளார்.
 மோதலை தவிர்க்க அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com