தீர்வு காணப்படாத ரயில்நிலைய பாதை பிரச்னை!: வர்த்தகர்கள், பொதுமக்கள் பாதிப்பு

கடலூரில் தீர்வு காணப்படாத ரயில் நிலைய பாதை பிரச்னையால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடலூர் நகராட்சியின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், ரயில்

கடலூரில் தீர்வு காணப்படாத ரயில் நிலைய பாதை பிரச்னையால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் நகராட்சியின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், ரயில் நிலையம், பான்பரி சந்தை, வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை திருப்பாதிரிபுலியூரில் அமைந்துள்ளன. அதுவும், பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையமும், பேருந்து நிலையத்தின் முன்பாகச் செல்லும் லாரன்ஸ் சாலையில் தங்க வர்த்தக நிறுவனங்களும், அதன் பின்புறம் பான்பரி சந்தையும் இயங்கி வருகின்றன. இந்தச் சந்தையில் சுமார் 750 கடைகளில் காய்கறி, மளிகைப் பொருள்களை மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இந்தச் சந்தை இயங்குகிறது. தினமும் சுமார் 25 ஆயிரம் பேர் இந்தச் சந்தைக்கு வந்து செல்கின்றனர். சந்தைக்குப் பின்புறம் மார்க்கெட் காலனி என்ற பொதுமக்கள் குடியிருப்பும் உள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சந்தைக்கு லாரன்ஸ் சாலை வழியாக மக்கள் வந்துச் சென்ற நிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. இதனால், சந்தைக்கு நேரடியாகச் செல்லும் பாதைகள் தடைபட்டு, திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையம் முன்புறம் உள்ள வழியாக மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இந்தப் பாதை வழியாகவே பான்பரி சந்தையின் பெரும்பாலான வர்த்தகப் போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தை கடந்த 7-ஆம் தேதி ஆய்வு செய்த திருச்சி கோட்ட ரயில்வே பொதுமேலாளர் உதயகுமார் ரெட்டி, ரயில்வே சொத்துக்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்படும் என்று தெரிவித்துச் சென்றார். அதற்கு மறுநாள் ரயில் நிலையத்தின் முகப்பில் போக்குவரத்தை தடை செய்யும் வகையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
இதனால், பான்பரி சந்தை, மார்க்கெட் காலனிக்கு வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதிகாலையில் சரக்கு ஏற்றி வந்த வாகனங்கள், வேறு சாலையில் நிறுத்தப்பட்டு சரக்குகள் இறக்கி கொண்டு செல்லப்பட்டன. இதனால், பாதிப்படைந்த வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரும்பு தடுப்புகளை சிலர் அப்புறப்படுத்தினர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வாறு, பொதுமக்களுக்கும், வர்த்தகர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்தப் பிரச்னை தொடர்பாக தற்போது பல்வேறு அமைப்பினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதுகுறித்து பான்பரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க துணைச் செயலர் கே.பக்கிராம் கூறியதாவது: சந்தையில் நகராட்சியால் கட்டப்பட்ட 270 கடைகளும், சிறு கடைகள், தள்ளுவண்டிக் கடைகள் சுமார் 500-ம் உள்ளன. ரயில்வே நிர்வாகம் எந்தவிதமான முன்னறிவிப்பும் செய்யாமல் போக்குவரத்துக்கான பாதையை திடீரென தடை செய்ததால் சரக்கு வாகனங்கள் வர முடியவில்லை. இதுகுறித்து நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறியுள்ளோம். அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இல்லையெனில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் நகரச் செயலர் ஆர்.அமர்நாத் கூறியதாவது: முதியவர்கள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் கூட ரயில் நிலையத்துக்கு ஆட்டோவில் செல்ல முடியாத நிலை உள்ளது. அங்குள்ள தபால் பிரிப்பு அலுவலகத்துக்கு வரும் வாகனங்கள் கூட உள்ளே நுழைய முடியவில்லை.
இதனால், பான்பரி சந்தை வியாபாரிகளும், சந்தைக்கு வரும் பொதுமக்களும், மார்க்கெட் காலனி மக்களுக்கும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம். தீர்வு காணப்படாத பட்சத்தில் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.
ரயில்வே சொத்துக்களை மீட்பதோடு, ரயில் நிலையப் பகுதியை லாபகரமானதாக அனைவரும் பயன்படுத்தச் செய்யும் நடவடிக்கையில் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாகவே ரயில் நிலையம் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com