கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டக் கோரி ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மா.ஆதனூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அல்லது கதவணை கட்ட வலியுறுத்தி, கீழணை விவசாய சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மா.ஆதனூர் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அல்லது கதவணை கட்ட வலியுறுத்தி, கீழணை விவசாய சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்கள் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதிகளாகும். காவிரியின் ஒரு பகுதி நீரானது கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் வந்து கீழணையில் தேக்கப்பட்டு வடவாறு, வடக்கு ராஜன் வாய்க்கால், வீராணம் ஏரி ஆகியவற்றின் வாயிலாக இந்தப் பகுதிகளில் கொண்டுவரப்பட்டு பாசனம் நடைபெறுகிறது.
 கடந்த 5 ஆண்டுகளாக காவிரியில் சரிவர தண்ணீர் வராததால் விவசாயப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2009, 2010 உள்ளிட்ட காலங்களில் கொள்ளிடம் ஆற்றில் மழைக் காலங்களில் சென்ற உபரி நீர் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் கடலுக்கு வீணாகச் சென்றது. இதனால் விவசாயிகள் கொள்ளிடம் ஆற்றில் கீழணைக்கு கீழ் பகுதியில் கதவணை அல்லது தடுப்பணை கட்ட வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
 இதை கருத்தில்கொண்டு 2014-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் கடலூர் மாவட்டம், மா. ஆதனூர் கிராமம், நாகை மாவட்டம், குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் பாலத்துடன் கூடிய கதவணை அமைக்கப்படும் என அறிவித்தார்.
 இதையடுத்து, அடுத்த சில மாதங்களிலேயே பொதுப் பணித் துறை அதிகாரிகள் மா.ஆதனூர் கிராமத்துக்கு வந்து கொள்ளிடம் ஆற்றில் கதவணை அமைக்கக் கூடிய இடத்தை தேர்வு செய்து, மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரக்கு முன் மாதிரி திட்டத்தை வரைவு செய்து அனுப்பினர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடலூரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கதவணை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார். ஆனால் திட்டப் பணிகள் தொடக்கப்படவில்லை.
 இந்த நிலையில், மா.ஆதனூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில், கொள்ளிடம் கீழணை விவசாயிகள் சங்கத்தினர் சங்கத் தலைவர் பி.விநாயகமூர்த்தி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்தில் பிச்சாவரம் கண்ணன், சோமசுந்தரம், கண்ணன், ஜீவகன், சின்னதுரை, செந்தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது, விவசாயிகள் தாங்களாகவே அணை கட்டுவதை உணர்த்தும் நோக்கில் செங்கற்களை கைகளில் ஏந்தி முழக்கமிட்டனர். கதவணை கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசைக் கண்டிப்பதாகக் கூறி கோஷங்களை எழுப்பினர்.
 இதுகுறித்து சங்கத் தலைவர் பி. விநாயகமூர்த்தி கூறியதாவது: இந்தத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சுமார் ரூ.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் திட்டம் தொடங்கப்படவில்லை. இதனால் விவசாயிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. விரைவில் கதவணை கட்டப்படவில்லை எனில் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.
 போராட்டத்தில் மா.ஆதனூர், பூந்தாழைமேடு, குணவாசல், ஓமாம்புலியூர், மோவூர், எய்யலூர், எடையார், குமராட்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com