ஆக்கிரமிப்பின் பிடியில் நகராட்சி இடம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடலூர் நகராட்சி இடத்தை ஆக்கிரமிக்கும் செயலைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.

கடலூர் நகராட்சி இடத்தை ஆக்கிரமிக்கும் செயலைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தினர்.
 கடலூர் நகரின் மையப் பகுதியான மஞ்சக்குப்பத்தில் சுமார் 36 ஏக்கரில் பொது இடம் உள்ளது. இதில், 16 ஏக்கரில் அண்ணா விளையாட்டு மைதானமும், 2 ஏக்கரில் சுப்பராயலு பூங்காவும் அமைக்கப்பட்டது. மீதமுள்ள இடம் மைதானமாக இருந்து வருகிறது. இந்த மைதானத்தில்தான் அரசியல் பொதுக் கூட்டங்கள், அரசின் கண்காட்சி, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
 மைதானத்தின் மூலையில் சுமார் 8 ஏக்கர் தனியாக அமைந்திருந்ததால், அந்த இடம் கவனிக்கப்படாமல் இருந்தது. எனவே, அந்த இடத்தில் 4 ஏக்கரில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
 மீதமுள்ள 4 ஏக்கரில் தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 2 நாள்களாக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. என்ன பணிக்காக தடுப்பு வேலி அமைக்கப்படுகிறது என்ற விவரத்தை தெரிவிக்க மறுப்பதால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்களிடையே அந்த இடம் ஆக்கிரமிக்கப்படுவதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
 இதுகுறித்து, கடலூர் நகராட்சி ஆணையர் க.சரவணன் கூறியதாவது:
 கடலூர் நகராட்சியில் ரூ. 42 கோடியில் ஒருங்கிணைந்த வடிகால் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கு ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் தங்களது பொருள்களைப் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்காக இந்த இடத்தை தற்போது வழங்கியுள்ளோம். ஒப்பந்தத்தில் இதற்கு வாடகை வசூலிக்க குறிப்பிட்டிருந்தால் வாடகையும் வசூலிக்கப்படும் என்றார் அவர்.
 இதுகுறித்து கடலூர் அனைத்துக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் மு.மருதவாணன் கூறியதாவது:
 மஞ்சக்குப்பம் மைதானம் 4 புறமும் பல்வேறு ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகிறது. எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றாமல் பாபு கலையரங்கத்தை நகராட்சியின் குப்பைக் கூடமாகவும், தளவாடப் பொருள்களை நிரப்பி வைத்திருக்கும் இடமாகவும் மாற்றி விட்டனர். தற்போது தனியார் ஆக்கிரமிப்புக்கு வழிவகை செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்தப் பொது இடத்தையும் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்தக் கூடாது என விதி உள்ள நிலையில், ஆண்டுக் கணக்கில் நடைபெறும் பணிக்கு எவ்வாறு ஒதுக்கீடு செய்ய முடியும்? என அவர் கேள்வி எழுப்பினார்.
 அனைத்துப் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார் கூறியதாவது: கடலூர் நகராட்சியின் வசமுள்ள இந்த மைதானம் பொது இடமாக மட்டுமே பராமரிக்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையுடன் தானமாக வழங்கப்பட்ட இடமாகும். அந்த இடத்தில் இரு சக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்லக் கூடாதென விதி உள்ளது. பொது இடத்தைப் பொதுப் பணிக்காக மட்டுமே பயன்படுத்தாமல் தனியாருக்குத் தாரை வார்ப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com