உபரி மின்சாரத்தை விற்பனை செய்ய என்எல்சிக்கு மத்திய அரசு அனுமதி

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் உபரியாக உள்ள மின்சாரத்தை நேரடியாகவே பயனீட்டாளர்களுக்கு

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் உபரியாக உள்ள மின்சாரத்தை நேரடியாகவே பயனீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் அதிகாரப்பூர்வ உரிமத்தை மத்திய அரசு வழங்கியுள்ளதாக என்.எல்.சி. தலைவர் சரத்குமார் ஆச்சார்யா தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழுப்பு நிலக்கரி சுரங்கங்கள், நிலக்கரியில் செயல்படும் மின் நிலையங்கள் ஆகிய துறைகளில் முக்கிய இடம் பிடித்து வந்த என்.எல்.சி. இந்தியா நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாக நிலக்கரியில் இயங்கும் அனல்மின் நிலையம், நிலக்கரிச் சுரங்கங்கள், காற்றாலை, சூரிய ஒளி மின்சக்தி என பல புதிய துறைகளில் தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது.
 மேலும், பல்வேறு புதிய சுரங்கங்கள், அனல்மின் திட்டங்களையும் நிறைவேற்ற பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
 மின் வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மின்சக்தியை அவை பெறாத நிலையில், உபரி மின்சக்தியை 2016-ஆம் ஆண்டு முதல் என்.டி.பி.சி. வியாபார் நிகாம் என்ற மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து வந்தது.
 அந்த வகையில், 2016-17 ஆம் ஆண்டில் ரூ. 134 கோடி, 2017-18 ஆம் ஆண்டில் ரூ. 294 கோடிக்கு உபரி மின்சக்தியை விற்பனை செய்து கூடுதல் வருவாய் ஈட்டப்பட்டது.
 இந்த நிலையில், என்.எல்.சி. இந்தியா நிறுவனம் உபரி மின்சக்தியை நேரடியாக விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ உரிமத்தை மத்திய மின்சக்தி ஒழுங்கு முறை ஆணையம் வழங்கியுள்ளது. இதன்மூலம், மின்சக்தியை சந்தையில் நேரடியாக விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் என்.எல்.சி. இந்தியா நிறுவனமும் இடம் பிடித்துள்ளது.
 மின்சக்தி உற்பத்தி செய்யும் அமைப்புகளிடமிருந்து கொள்முதல் செய்யவும், அதைத் தேவையான நிறுவனங்களுக்கு நேரடியாக விற்பனை செய்யவும் பிரத்யேகமாக ஒரு தனிப் பிரிவு தொடங்கத் திட்டமிட்டப்பட்டுள்ளது.
 இதன்மூலம், மின்சக்தி தேவை குறையும் போது, மின் உற்பத்தி நிலையங்கள் தங்களது நிறுவு திறனைவிட உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குச் செல்லாது, உபரி மின்சக்தியை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மூலம் தேவையான நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 இந்த புதிய வர்த்தக வாய்ப்பின் மூலம், மின்னாற்றலை வீணாக்காமல், மிகச் சிறந்த முறையில் கையாண்டு, தேசத்தின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்களிப்பை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் அதிகரிக்க உள்ளது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com