வன்முறை சம்பவங்களுக்கு தொண்டர்கள் மட்டுமே பொறுப்பல்ல: வடக்கு மண்டல ஐ.ஜி.

வன்முறை சம்பவங்களுக்கு தொண்டர்களை மட்டும் பொறுப்பாக்க மாட்டோம் என கடலூரில் புதன்கிழமை காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் கூறினார்.

வன்முறை சம்பவங்களுக்கு தொண்டர்களை மட்டும் பொறுப்பாக்க மாட்டோம் என கடலூரில் புதன்கிழமை காவல் துறை வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர் கூறினார்.
 காவிரி பிரச்னை, ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் கைது உள்ளிட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை சூறை, பேருந்துகளுக்கு தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதுதொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக தமிழக காவல் துறையின் வடக்கு மணடல தலைவர் ஸ்ரீதர் புதன்கிழமை கடலூர் வந்தார். தொடர்ந்து அவர், காவல் துறைத் துணைத் தலைவர் சந்தோஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், கமாண்டட் பால்ராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு கட்சி நிர்வாகிகளை அழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு சமூக விரோதச் செயல்கள் குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 70 சதவீத குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறை பணிச்சுமை நிறைந்த வேலை என்று தெரிந்துதான் பணிக்கு வருகின்றனர். இருக்கின்ற காவலர்களைக் கொண்டு வழங்கப்பட்டுள்ள பணிகளை செய்து முடிக்க வேண்டும். ஒரு காவலருக்கு அதிகபட்சம் 12 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டலத்தில் கடந்த 6 மாதங்களில் 325 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளோம். மணல் கடத்தலைத் தடுக்கும் வகையில் 68 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 வன்முறை சம்பவங்களுக்கு தொண்டர்கள் மட்டுமே பொறுப்பல்ல; கட்சிகளின், அமைப்புகளின் நிர்வாகிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com