அண்ணாமலைப் பல்கலை. ஊழியர்கள் சங்கத் தேர்தல் அறிவிப்பு ரத்து: அமைதிப் பேச்சுவார்த்தையில் முடிவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கத் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கப் பொதுக் குழுக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில் தற்போதைய தலைவர் சௌ.மனோகரன், சங்கத் தேர்தல் தேதியை அறிவித்தார்.
 ஆனால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டும், பணிநிரவலில் சென்ற ஊழியர்களும் தேர்தலில் வாக்களிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பல்வேறு அணியினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கூட்டம் பாதியில் முடிந்தது.
 சங்கத் தேர்தல் நடத்துவதில் 3 பிரிவினரிடையே முரண்பாடான கருத்துகள் நிலவிய நிலையில், சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர், சங்கப் பிரதிநிதிகள், ஊழியர்கள் கலந்துகொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியர் மு.அமுதா தலைமை வகித்தார். அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் வீரமணி, ஊழியர்கள் சங்கத் தலைவர் சௌ.மனோகரன், முன்னாள் தலைவர் மதியழகன், ரவிச்சந்திரன், ஏ.ஜி.மனோகர், ஜி.ரகு, பன்னீர்செல்வம், விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால், பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் ஏற்படவில்லை.
 இந்த நிலையில், வட்டாட்சியர் அமுதா கூறியதாவது:
 அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தேர்தல் நடத்துவதில் முரண்பாடான கருத்துகள் நிலவும் அசாத்தியமான சூழலில், தேர்தலை நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும்.
 இதனால், 27-6-2018 அன்று தேர்தல் நடத்தவோ, அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளவோ கூடாது.
 பேச்சுவார்த்தையில் முத்தரப்பினர் இடையே சுமுக முடிவு ஏற்படாததால், தேர்தல் நடத்துவது குறித்து நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடிக்கொள்வது என முடிவு செய்யப்பட்டதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com