கடலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

கடலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூரில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 இயற்கைச் சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் கடலூர் மாவட்டத்தில், வெள்ளத் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், கெடிலம் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணியும் ஒன்றாகும். இந்தப் பணிக்காக, கடலூர் புதுப்பாளையத்தில் கெடிலம் ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 300 வீடுகளை மாவட்ட நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்புறப்படுத்தியது.
 அதன் தொடர்ச்சியாக காமராஜ் நகர் பகுதியில் உள்ள 56 வீடுகளை அகற்றிட நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. இதில், 10 குடும்பத்தினர் வீடுகளை காலி செய்த நிலையில், மீதமுள்ளவர்கள் நீதிமன்றத்தை அணுகினர். ஜூன் 8-ஆம் தேதி வரை அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. எனினும், வீடுகளை காலி செய்யாததால் திங்கள்கிழமை பொதுப்பணித் துறையினர், வருவாய்த் துறையினர் இணைந்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் பாதுகாப்போடு, பொக்லைன் இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்கு அந்தப் பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். அப்போது அரசு அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், ராதா (69) என்ற மூதாட்டி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். காவல் துறையினர் உரிய நேரத்தில் அவரை தடுத்தனர்.
 இதையடுத்து, அந்தப் பகுதியினர் ஊர்வலமாகச் சென்று கடலூர் - சிதம்பரம் சாலையில் அண்ணா மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கடலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் த.அ.ஜோ.லாமேக் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் பொதுமக்கள் கலைந்துச் சென்றனர். இதையடுத்து, மற்ற ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் துறை அலுவலர்கள் ஈடுபட்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com