முருங்கை விளைச்சல் அமோகம்!

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் முருங்கை விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் முருங்கை விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தற்போது, முருங்கைக் காய்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதாலும், ஓரளவு விலை கிடைப்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
இதுகுறித்து குறிஞ்சிப்பாடி அருகே உள்ள சேராக்குப்பத்தைச் சேர்ந்த முருங்கை விவசாயிகள் கே.தில்லைகோவிந்தன், ராஜசண்முகம், பாண்டுரங்கன் ஆகியோர் கூறியதாவது: ஒட்டன்சத்திரத்தில் இருந்து முருங்கை விதைகளை வாங்கி வந்து விதைப்பு செய்து வந்தோம். தற்போது, நாங்களே விதைகளை உற்பத்தி செய்துகொள்கிறோம்.
 கார்த்திகைப் பட்டத்தில் மணிலா விதைப்பின்போது ஊடு பயிராக முருங்கை விதையும் நடவு செய்யப்படும். ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரை 3 மாதங்கள் அறுவடை நடைபெறும். 
தற்போது முருங்கை மரங்கள் நன்கு செழித்து வளர்ந்து மகசூல் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நிகழாண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 8 நாள்களுக்கு ஒரு முறை முருங்கை அறுவடை நடைபெறும். வியாபாரிகள் விவசாய நிலத்துக்கு நேரில் வந்து கொள்முதல் செய்கின்றனர். 
பிஞ்சு முருங்கைக் காய்கள் மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றன.  கடந்த 10 நாள்களாக ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.23-க்கு விலைபோகிறது. ஒரு ஏக்கர் முருங்கை சாகுபடி செய்ய ரூ.40 ஆயிரம் வரை செலவாகும். ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ஒரு டன் வரை முருங்கைக் காய்களை அறுவடை செய்யலாம். முருங்கையில் வேர் அழுகல் நோய், பூக்க, பிஞ்சுகள் உதிர்தல், சாறு உறிஞ்சும் பூச்சித் தாக்குதல் போன்ற பிரச்னைகள் உள்ளன. 
அதற்கு உரிய மருந்துகளை அவ்வப்போது தெளித்து வந்தால் நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com