இலவச வீட்டுமனை கோரி தாயகம் திரும்பிய தமிழர்கள் மனு

இலவச வீட்டுமனை கோரி இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் சார்-ஆட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

இலவச வீட்டுமனை கோரி இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்கள் சார்-ஆட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
இந்தியா-இலங்கை ஒப்பந்தந்தம் அடிப்படையில் இலங்கையிருந்து தமிழகம் திரும்பிய 35 குடும்பத்தினர் கடலூர், ராமாபுரத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் புதன்கிழமை கடலூரில் சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸை சந்தித்து மனு அளித்தனர்.  
அந்த மனுவில், இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் படி 1981-ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய தமிழர்கள் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த மதர்சொசைட்டி என்ற அமைப்பு 48 குடும்பத்தினரை கடலூர் ராமாபுரம் மலைப் பகுதியில் குடியமர்த்தியது. இதற்காக மத்திய அரசு குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரத்தை உதவித்தொகையாக அந்த அமைப்புக்கு கொடுத்ததாக தெரிகிறது. இவ்வாறு அழைத்து வரப்பட்ட அந்த குடும்பங்களை மதர்சொசைட்டி ராமாபுரம் பகுதியில் தனக்குச் சொந்தமான 350 ஏக்கர் நிலப்பகுதியின் ஓரிடத்தில் குடியமர்த்தியது. அங்கு அவர்களுக்கு தறி அமைத்து கொடுத்து நெசவுத்தொழிலில் ஈடுபடுத்தியது.
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தொழில் சரிவர நடக்கவில்லை எனக் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் அருகாமையில் குடிசைகள் கட்டித் தங்கி விவசாயக் கூலி வேலைகளை செய்து 37 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் 1998-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது அரசு புறம்போக்கு பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள்  வழங்கப்பட்டன. ஆயினும் பட்டா விவரங்கள் பதிவாளர் அலுவலகத்தில் உரிய முறையில் பதிவு செய்யப்படவில்லை. பட்டா கிடைக்காத 35 குடும்பத்தினர் தங்களுக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோரிடம் கடந்த பத்தாண்டுகளாக மனுக்கள் அளித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். 
இந்த நிலையில் தனியார் இடத்தில் வசித்து வரும் 35 குடும்பங்களை அந்த இடத்தின் உரிமையாளர் வெளியேறுமாறு கடந்த சில மாதங்களாக வலியுறுத்தி வருகிறார். தற்போது அந்த இடத்தை அளந்து விற்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால் குடியிருக்க இடமின்றி 35 குடும்பங்களும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கருணை அடிப்படையில் வீட்டுமனையும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் சார்-ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தனர். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சார்-ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com