முதன்மைக் கல்வி அலுவலக மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஆசிரியர்!

மீண்டும் பணி வழங்கக் கோரி, கடலூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பகுதிநேர ஆசிரியரை காவல் துறையினர் வியாழக்கிழமை மீட்டனர்.

மீண்டும் பணி வழங்கக் கோரி, கடலூரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பகுதிநேர ஆசிரியரை காவல் துறையினர் வியாழக்கிழமை மீட்டனர்.
 கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர் ச.சேரன் (53). அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலமாக மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி வந்தார்.
 இவர், வியாழக்கிழமை கடலூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தின் மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூர் புதுநகர் காவல் துறையினர், சேரனை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
 அப்போது அவர் அளித்த மனு: நான் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, சில மாதங்கள் வரை சிகிச்சை பெற்ற நிலையில் பள்ளிக்குச் செல்லவில்லை. மீண்டும் பள்ளிக்குச் சென்ற போது, எனக்கு பணி வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக இரண்டு முதன்மைக் கல்வி அலுவலர்களை அணுகியபோது, அவர்கள் சென்னைக்குச் செல்லுமாறு கூறி அலைக்கழித்து வருகின்றனர். தற்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் அ.ராஜேந்திரன் எனக்கு பணி ஆணை வழங்கிட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு உத்தரவிட்டும், அந்தத் துறையினர் பணி ஆணை வழங்க மறுக்கின்றனர். இதே நிலை மாவட்டத்தில் மேலும் சிலருக்கும் ஏற்பட்டுள்ளது.
 எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் உதவித் திட்ட அலுவலர் பாபுவிநாயகம் கூறியதாவது: பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மாதத்தில் 12 அரை நாள்கள் பணிபுரிந்தால் ரூ.7,700 ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால், எந்தவிதத் தகவலும் தெரிவிக்காமல் 3 மாதங்களாகப் பணிக்கு வராதவர்கள் அதிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
 அதன்படி நடவடிக்கைக்கு உள்ளான சேரன், மீண்டும் பணி கேட்டதைத் தொடர்ந்து தற்போதைய முதன்மைக் கல்வி அலுவலரின் முயற்சியால் அவரது கோப்பு சென்னைக்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளதுஎன்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com