ரூ.140 கோடியில் புதைவட மின் பாதை அமைக்கும் திட்டம்

கடற்கரையோரப் பகுதிகளில் புதைவட மின்பாதை அமைக்கும் திட்டத்தின்கீழ், கடலூர் நகரில் ரூ.140 கோடியில் மின் பாதை அமைக்கும் பணி ஜுன் மாதம் தொடங்குகிறது. 

கடற்கரையோரப் பகுதிகளில் புதைவட மின்பாதை அமைக்கும் திட்டத்தின்கீழ், கடலூர் நகரில் ரூ.140 கோடியில் மின் பாதை அமைக்கும் பணி ஜுன் மாதம் தொடங்குகிறது. 
கடலூர் மாவட்டத்தில் 2011}ஆம் ஆண்டு வீசிய தானே புயல் கடுமையான சேதத்தை விளைவித்தது. அப்போது, கடற்கரையோர நகரம், கிராமங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தும், முறிந்தும் விழுந்தன. இந்த மின்கம்பங்களை சீரமைத்து மீண்டும் மின்விநியோகம் செய்திட ஒரு மாதம் வரை ஆனது. முன்னதாக, 2004}ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப் பேரலையாலும் மின்சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, அடிக்கடி இயற்கை பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் கடலூர் மாவட்டத்தில் மின் கம்பங்களை மாற்றி, பூமிக்குள் மின்கம்பிகளை பதித்து கொண்டு செல்ல தமிழ்நாடு இயற்கை பேரிடர் மேலாண்மை அமைப்பு திட்டமிட்டது. இதன்படி, முதல்கட்டமாக கடலூர் நகரப் பகுதியில் கடற்கரையிலிருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் வரும் பகுதிக்குள் இந்தத் திட்டத்தை செயல்படுத்திட திட்ட வரைவு மேற்கொள்ளப்பட்டது. 
இந்தத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் பெற்று, உலக வங்கி நிதி வசதியுடன் ரூ.140 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு புதைவட மின்பாதைகள் அமைக்க வேண்டிய ஊர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பான பல்வேறுத் துறைகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மூன்று கட்டங்களாக அமல்படுத்த திட்டமிடப்பட்டு முதல்கட்டமாக கடலூர் நகரம் மற்றும் அருகே உள்ள கரையேறவிட்டகுப்பம், சான்றோர்பாளையம், புருகீஸ்பேட்டை, சிங்காரத்தோப்பு, அக்கரகோரி, சோனங்குப்பம், சாய்பாபாநகர், கோண்டூர், எஸ்.என்.சாவடி, அருந்ததி நகர், உப்பலவாடி, பூந்தென்றல் நகர், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, பெரியார் நகர், சங்கொலிகுப்பம், குடிகாடு, ஈச்சங்காடு ஆகிய பகுதிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில், உயரழுத்த மின்பாதையில் செல்லும் மின் வயர்கள் 61.25 கி.மீ. தூரத்துக்கும், குறைந்தழுத்த மின்பாதையில் செல்லும் மின் வயர்கள் 73.98 கி.மீ தூரத்துக்கும் மண்ணில் புதைக்கப்படுகிறது. 
குழி தோண்டப்பட்டு அதில் மணல் நிரப்பி அதன் மேலே மின்சார வயர்கள் பதிக்கப்படுகின்றன. வயருக்கு மேலே தரைக்கல் பதிக்கப்பட்டு அதன் மீது அபாயம் என்று எச்சரிக்கை செய்யும் வாசகம் அடங்கிய ஒயர் ஒட்டப்படும். 
இதனால், தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள சுமார் 12 ஆயிரம் குடியிருப்புகள், தொழில்சாலைகள், அலுவலகங்கள் பயன்பெறும். 
மின்சார பாதையில் பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்வது தொடர்பாக மின் வாரிய ஊழியர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பூமிக்குள் வயர்களை புதைத்து வைத்திருக்கும் தொலைபேசித் துறை முதலிய துறையினருக்கும் இதுதொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாம்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் மேற்பார்வை பொறியாளர் சே.சத்யநாராயணா கூறியதாவது: இந்தத் திட்டத்தின் அனைத்து நடைமுறைகளும் முடிவுற்ற நிலையில், தற்போது பொருள்களை வாங்கும் பணியில் ஒப்பந்ததாரர் ஈடுபட்டு வருகிறார். 
எனவே, ஜுன் மாத இறுதி வாரத்துக்குள் இந்தப் பணிகள் தொடங்கிவிடும். இரண்டாம் கட்டத்தில் பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வரைவுத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com