புத்தாக்கப் பயிற்சியைப் புறக்கணித்துகிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியை, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சியை, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது மக்களுக்கு இணைய வழி சேவை மூலமாக வருவாய், சாதி, இருப்பிடம் உள்ளிட்டச் சான்றுகள் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. இதில் விண்ணப்பிக்கும் பொதுமக்களிடமிருந்து ஒரு சான்றிதழுக்கு ரூ.60 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு இணைய கட்டணமாக மாதந்தோறும் ரூ.250 வழங்க வேண்டுமென கிராம நிர்வாக அலுவலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தத் தொகை தொடக்கத்தில் 3 மாதங்கள் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் வழங்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர், இணையம் மூலம் சான்றிதழ்கள் வழங்கும் பணியை வெள்ளிக்கிழமை முதல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜுன் 1-ஆம் தேதி முதல் வாரிசுதாரர், ஓபிசி, விதவை, சிறு விவசாயிகள் உள்ளிட்ட 16 வகைச் சான்றிதழ்களை இணையம் மூலம் வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் புத்தாக்கப் பயிற்சி அளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த 200 கிராம நிர்வாக அலுவலர்கள் புத்தாக்க பயிற்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 150 பேர் பயிற்சிக்காக வந்திருந்தனர். இவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோ. விஜயா, சார்-ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
ஆனால், பயிற்சி தொடங்கிய உடன் கிராம நிர்வாக அலுவலர்கள் பேசுகையில், ஏற்கெனவே 2013-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இணைய தொகையை வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். அந்த தொகையே வழங்கப்படாத நிலையில், மேலும் 16 சான்றிதழ்களையும் இணையம் மூலம் வழங்க வலியுறுத்துவது ஏற்புடையதல்ல என்றனர்.
அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், இதில் உடன்பாடு ஏற்படாததால் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் புத்தாக்கப் பயிற்சியைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலர் விஸ்வநாதன், செய்தித் தொடர்பாளர் சிவக்குமார், பிரசார செயலர் ஆறுமுகம், கோட்டச் செயலர் ஜெயராமன் மற்றும் நான்கு வட்டங்களின் பொறுப்பாளர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com