ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை சம்பவம்: 5 பேரை விருத்தாசலத்துக்கு அழைத்து வந்து விசாரணை

ரயிலில் துளையிட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடித்த சம்பவத்தில் கைதானவர்களில் 5 பேரை விருத்தாசலம் ரயில்

ரயிலில் துளையிட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடித்த சம்பவத்தில் கைதானவர்களில் 5 பேரை விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு போலீஸார் சனிக்கிழமை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
சேலத்திலிருந்து சென்னையிலுள்ள ரிசர்வ் வங்கிக்கு பழைய மற்றும் கிழிந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் ரூ.323 கோடி ரயிலில் கடந்த 2016- ஆம் ஆண்டு ஆக.8 ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டது. அப்போது, ரயிலின் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பினர். 
இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி, மத்தியப் பிரதேசம் மாநிலம், குணா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹர்சிங் தலைமையிலான கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக, ரயிலின் மேற்கூரையை துளையிட்டு பணத்தை கொள்ளையடித்த இடம், கொள்ளையர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்த ஆதாரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். இதற்காக, கொள்ளையில் ஈடுபட்டவர்களை சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் ரயில் நிலையங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று, கொள்ளை எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை நடித்துக் காட்டச் செய்து அவற்றை பதிவுசெய்யும் நடவடிக்கையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். 
அதன்படி, குற்றம்சாட்டப்பட்டு விசாரணையில் உள்ள 5 பேருடன் சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை காலையில் விருத்தாசலம் ரயில்வே நிலையத்துக்கு வந்தனர். அவர்களை முதலாவது நடைமேடையில் நிற்கவைத்து, கொள்ளை சம்பவ செய்முறை காட்சிகளை நடிக்கச் செய்து அவற்றை விடியோவில் பதிவு செய்ததாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சின்னசேலம் ரயில் நிலையத்துக்குச் சென்ற சிபிசிஐடி போலீஸார், விருத்தாசலத்தில் செய்தது போல அங்கேயும் செய்து காண்பிக்குமாறு 5 பேரிடமும் அறிவுறுத்தி, அதையும் விடியோவில் பதிவு செய்துகொண்டதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com