1,400 புதிய மின் கம்பங்கள் தயார்!

புயல் பாதித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கடலூர் மாவட்டத்துக்கு 1,400 புதிய மின் கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

புயல் பாதித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கடலூர் மாவட்டத்துக்கு 1,400 புதிய மின் கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
 கஜா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடுமென இந்திய வானிலை மையம் அறிவித்தது. கஜா புயல் தாக்கும் எல்லைக்குள் கடலூர் மாவட்டமும் இருந்து வந்ததால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில், கூடுதலாக மின் கம்பங்களை வரவழைத்து இருப்பு வைத்துள்ளது.
 ஏனெனில், புயல் தாக்கத்தில் அதிகமாக பாதிக்கப்படுவது மரங்களும், மின்சார கம்பங்களும்தான்.
 மின் கம்பங்கள் சரிந்து விழுவது, உடைந்து விழுவது போன்றவற்றால் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை உருவாகும். தற்போது அனைத்துப் பணிகளுக்கும் மின்சாரம் மிகவும் இன்றியமையாதது என்ற நிலை உருவாகியுள்ளதால், மின்சாரத்தை உடனடியாக வழங்க வேண்டியதே மாவட்ட நிர்வாகத்தின் தலையாயப் பிரச்னையாகும்.
 இதனை சரிசெய்யும் வகையில் முன்கூட்டியே மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
 இதுகுறித்து தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கடலூர் கோட்ட மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.சத்தியநாராயணா கூறியதாவது: புயல் தாக்குதலுக்கு உள்ளாகும் மின் கம்பங்களை உடனடியாக மாற்றி, புதிய கம்பங்களை நடும் பணிக்கு மின்சார வாரியம் தயாராக உள்ளது. இதற்காக, இதுவரை 1,400 புதிய மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
 புயல் கரையைக் கடக்கும் பகுதி, சேதத்தைப் பொறுத்து கூடுதலாக ஆயிரம் மின்கம்பங்கள் வரவழைக்கப்படும். மேலும், கூடுதல் பணியாளர்கள் தேவைப்பட்டால் அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்து உடனடியாக வரவழைக்க தேவையான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது.
 கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 28 உள்கோட்டங்களிலும் தலா 15 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் காற்றின் வேகத்தைப் பொறுத்து அந்தந்தப் பகுதிகளில் மின்விநியோகத்தை நிறுத்தி வைப்பது, மின்விநியோகம் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். மேலும், மின் பாதைகளையும் கண்காணிப்பார்கள் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com