கஜா புயலுக்கு கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 4 பேர் சாவு

கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கஜா புயலுக்கு 4 பேர் உயிரிழந்தனர்.

கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கஜா புயலுக்கு 4 பேர் உயிரிழந்தனர்.
வங்கக் கடலில் உருவான கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. புயல் காரணமாக மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். அதுகுறித்த விவரம்:
வேப்பூர் வட்டம், மேமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நா.ராமச்சந்திரன் (41). இவரது மனைவி அய்யம்மாள் (36). இவர்களுக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, மழைக்கு தாக்குப்பிடிக்காமல் வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ராமச்சந்திரன் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் குழந்தைகள் 3 பேரும் காயமின்றி தப்பினர்.
இதேபோல, குறிஞ்சிப்பாடி வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆ.ஆனந்தன் (40). இவர் வியாழக்கிழமை மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டின் அருகே மழைநீர் தேங்காமலிருக்கும் வகையில் பணியில் ஈடுபட்டார். அப்போது, வீட்டின் முன் அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் அவர் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு, சுந்தரி (30) என்ற மனைவியும், சூர்யா (10) என்ற மகனும், அனுஷ்கா (8) என்ற மகளும் உள்ளனர்.
பண்ருட்டி வட்டம், நடுக்குப்பத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் ரங்கநாதன் (38). என்எல்சி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவர் பணிக்காக வியாழக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் குள்ளஞ்சாவடி-காட்டுக்கூடலூர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த ரங்கநாதன் மருங்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்தார். இவருக்கு மலர் (34) என்ற மனைவியும், சாரதி (15) என்ற மகனும் உள்ளனர். இந்தச் சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானார். செய்யாறு அருகே உள்ள வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசி (42). சமையல் தொழிலாளி. இவர், மனைவி லட்சுமி (37), மகள்கள் பிரியதர்ஷினி (15), பிரியாமணி (7), தமிழ்பிரியா ஆகியோருடன் வியாழக்கிழமை இரவு குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிறுமி பிரியாமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். துளசி உள்ளிட்ட 4 பேரும் பலத்த காயமடைந்து, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் துளசி தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து மோரணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன், மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறினார்.














 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com