பார்வையாளர்களின்றி நடத்தப்பட்ட சிறந்த அறிவியல் படைப்புகளின் கண்காட்சி!

பள்ளி மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள் அடங்கிய கண்காட்சி கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், இந்தக் கண்காட்சிக்கு பார்வையாளர்கள் அழைக்கப்படாததால் மாணவர்கள் வருத்தமடைந்தனர்.

பள்ளி மாணவர்களின் சிறந்த அறிவியல் படைப்புகள் அடங்கிய கண்காட்சி கடலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், இந்தக் கண்காட்சிக்கு பார்வையாளர்கள் அழைக்கப்படாததால் மாணவர்கள் வருத்தமடைந்தனர்.
பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், கல்வித் துறையால் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாவட்ட அளவிலும் குறுவட்டம், கல்வி மாவட்டங்கள், வருவாய் மாவட்டங்கள் அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வானவர்களை மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கின்றனர். இதில் சிறந்த படைப்புக்கு ரொக்கமும், பாராட்டுச் சான்றிதழும் அரசால் வழங்கப்படும். 
இதன்படி, கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குறுவட்டம், கல்வி மாவட்டங்கள் அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. இதில், தேர்வான சிறந்த அறிவியல் படைப்புகள் அடங்கிய கண்காட்சி, கடலூர் வருவாய் மாவட்ட அளவில் கடலூரில் புனித.வளனார் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 4 கல்வி மாவட்டங்களிலிருந்தும் 220 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் 374 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒரு படைப்புக்கு சராசரியாக 2 மாணவர்கள் வீதம் சுமார் 700 மாணவர்களும், 220 பள்ளிகளிலிருந்து தலா ஓர் ஆசிரியரும் கண்காட்சியில் பங்கேற்றனர். 
வழக்கமாக இந்தக் கண்காட்சி நடைபெறும்போது மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு கண்காட்சியை பார்வையிட மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். ஆனால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்காட்சிக்கு இதுபோன்ற ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லையாம். இதனால், மாணவர்கள் தங்களது படைப்புகளை வெறுமனே காட்சிப்படுத்தி வைத்திருந்து, நடுவர்களுக்கு மட்டுமே விளக்கினர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் தரப்பில் கூறியதாவது: 
பொதுவாக மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட மற்ற பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் அழைத்து வரப்படுவார்கள். இது கண்காட்சியில் படைப்புகளை வைத்திருக்கும் மாணவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். ஏனெனில், தங்களது படைப்பை மற்றவர்கள் பார்வையிட்டு அதனை பாராட்டுவதே அந்த மாணவருக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். ஆனால், இந்தக் கண்காட்சியில் அப்படியொரு ஏற்பாடு செய்யப்படாதது மாணவர்களிடம் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது என்றனர்.
இதுகுறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த மாவட்ட கல்வித் துறை தரப்பில் தெரிவித்ததாவது: இந்தக் கண்காட்சி இயற்கை வளம் மேலாண்மை, விவசாயம், உடல் நலம், கழிவுகள் மேலாண்மை, போக்குவரத்து மாற்றம், கணித மாதிரி ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டது. இதில், தேர்ந்தெடுக்கப்படும் 4 மாதிரிகள் மாநில தேர்வுக்கு அனுப்பி வைக்கப்படும். 
இருப்பினும், நிதி நிலையைக் 
காரணம் காட்டி சில பள்ளிகள் மாநில அளவிலான போட்டிக்குச் செல்ல மறுப்பார்கள். போதுமான நிதி ஒதுக்கீடு பெறப்படாததால் மற்ற செலவுகளையும் செய்ய முடியாமல் மாணவ, மாணவிகளை கண்காட்சியைப் பார்வையிட அழைக்கவில்லை என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com