ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க 40 அரசுப் பள்ளிகளில் "பயோ - மெட்ரிக்' முறை

கடலூர் மாவட்டத்தில் 40 அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் 40 அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித் துறையினர் தெரிவித்தனர்.
 தமிழகத்தில் கல்வித் துறை மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளை முன்னாள் மாணவர்கள், தொழில் நிறுவனங்கள் தத்தெடுக்க முன்வர வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
 இந்த நிலையில், பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் வருகையைக் கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கடலூர் மாவட்டத்தில் 40 பள்ளிகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், வடலூர் கல்வி மாவட்டங்களில் தலா 10 பள்ளிகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டு பயோ-மெட்ரிக் இயந்திரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.பழனிசாமி கூறியதாவது: மாவட்டத்தில், 4 கல்வி மாவட்டங்களில் 2,224 பள்ளிகள் உள்ளன. இதில், 143 அரசுப் பள்ளிகள், 75 மெட்ரிக் பள்ளிகள், 29 அரசு உதவி பெறும் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக உள்ளன. இதிலிருந்து 40 அரசுப் பள்ளிகளைத் தேர்வு செய்து பயோ-மெட்ரிக் இயந்திரம் பொருத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தில் பள்ளியின் முழு விவரங்கள், ஆசிரியரின் தனிப்பட்ட பணி விவரம், எத்தனை மாணவ, மாணவிகள், அவர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றையும் பதிவு செய்ய முடியும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் மாவட்டத்தில் மற்ற பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
 முன்னதாக, இந்த இயந்திரத்தில் மாணவர்களின் விவரங்களையும் பதிவேற்றம் செய்யும் வகையில் அவர்களிடம் படிவம் வழங்கப்பட்டு, சுய விவரக் குறிப்புகள், வங்கி, ஆதார் எண்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டன. இந்த விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், அவர்களது வருகையும் பயோ-மெட்ரிக் இயந்திரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
 இதன் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே குறிப்பிட்ட பள்ளிகளில் ஆசிரியர் வருகை, மாணவர் வருகை உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இது ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளிக்கு வந்து செல்வதை உறுதிப்படுத்தும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com