புயல் பாதுகாப்பு மையங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் புயல் பாதுகாப்பு மையங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் புயல் பாதுகாப்பு மையங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
 கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையிலான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது: வடகிழக்கு பருவ மழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் புயல் பாதுகாப்பு மையத்துக்கோ, பாதுகாப்பான, மேடான இடங்களுக்கோ அவர்களை அழைத்துச் செல்ல மாவட்ட, கோட்ட, வட்ட அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க ஏதுவாக மாற்றுவழியை தேர்வு செய்ய வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அலுவலகங்களில் தீயணைப்பு, காவல், மருத்துவம், ஊர்க்காவல்படை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒத்திகை பயிற்சி நடத்திட வேண்டும்.
 மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 14 பல்நோக்கு தங்கும் மையங்களில் உள்ள பழுதுகளை உடனடியாக பொதுப் பணித் துறையினர் சரிசெய்ய வேண்டும். 117 சமுதாயக் கூடங்கள், 34 கல்லூரிகள், 1,692 பள்ளிகள், 57 தனியார் திருமண மண்டபங்கள் ஆகியவைகளை பார்வையிட்டு, பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்குவதற்கு உரிய வசதிகள் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.
 அவ்வப்போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் வெள்ள நிவாரண பிரிவுக்கு 1077 என்ற தொலைபேசி எண் மூலம் தெரிவிக்க வேண்டும்.
 பேரிடர் காலங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், எரிபொருள் தயார் நிலையில் வைத்திருத்தல், ஜெனரேட்டர் வழங்குதல், பம்புசெட், படகு, மரம் அறுக்கும் இயந்திரம் இருப்பு போன்ற ஏற்பாடுகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செய்ய வேண்டும்.
 மாவட்டத்திலுள்ள 228 ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ள விவரங்கள், வெள்ளத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் கூர் உணர்வுமிக்க இடங்கள் எவை, அவற்றுள் மணல் மூட்டைகள், சவுக்குக் கட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்கள் விவரம் ஆகியவற்றை பொதுப் பணித் துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
 மேலும், அனைத்து மருத்துவமனைகளிலும் அவசர ஊர்திகளை பழுது நீக்கி தயார் நிலையில் வைத்திருத்தல், 24 மணிநேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதிப்படுத்துதல், அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் உள்ள நீர்தாங்கி வாகனங்களை தயார் நிலையில் வைத்திருத்தல், சீரான மின்சாரம் வழங்குதல், மின் கம்பி இணைப்புகளை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டுமென கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
 கூட்டத்தில் கடலூர் சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.ஆனந்ராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com