தென்பெண்ணையாற்றின் கரைகள் சேதம்! குடியிருப்போர் நலச் சங்கம் புகார்

கடலூர் நகரில் தென்பெண்ணையாற்றின் கரைகள் சேதப்படுத்தப்படுவதாக அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.

கடலூர் நகரில் தென்பெண்ணையாற்றின் கரைகள் சேதப்படுத்தப்படுவதாக அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.
 கடலூரில் தென்பெண்ணையாற்றின் கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட சுங்கச்சாலை தொடங்கும் இடத்துக்கு அருகே, குமரப்பன்  நகர் மழைநீர் வடிகாலின் வடக்கு பகுதியில் கடந்த  ஆண்டு வெள்ள நீர்  ஊருக்குள் புகுந்தது. அப்போது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களை  பாதுகாத்தது.
 தற்போது அந்த இடத்தில் வெள்ள பாதிப்புகளை கணக்கில்கொண்டு, சிறிய பாலம் அருகே இரண்டு பக்கமும்  தடுப்பு சுவர் அமைந்திடும் பணிகள் தொடங்கியுள்ளன. 
இந்த பாலம் சீரமைப்பு  பணிகளில் ஈடுபட்டு  வரும் கடலூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், கடந்த ஆண்டு கரை உடைந்து வெள்ள நீர்  ஊருக்குள் புகுந்த அதே இடத்தின் கரைகளை சேதப்படுத்தி உள்ளதாக கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அந்த பகுதியில் உள்ள மணலை எடுப்பதற்காக  ஆற்றின் கரைகளை சேதப்படுத்தியுள்ளனராம்.
 இதுதொடர்பாக, அந்தச் சங்கத்தின் பொதுச் செயலர் மு.மருதவாணன் மேலும் கூறியதாவது: ஆற்றின் பலமான கரைகள் சேதப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், அடுத்த மாதம்  பருவ மழை தொடங்கி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், பலவீனமான ஆற்றங்கரை  வழியாக வெள்ள நீர் மிக வேகமாக உள்ளே புகும். இதனால், குமரப்பன் நகர், வி.எஸ்.எல். நகர், நடேசன் நகர்,  சண்முகா நகர்,  குறிஞ்சி நகர் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. 
எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு, உடைக்கப்பட்ட கரைகளை பலப்படுத்த வேண்டும்.
 பெண்ணையாற்றின் கரைகளை உடைத்து எங்கெல்லாம் மணல் திருடுகிறார்களோ அவற்றையும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com