நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அலைக்கழிப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்.30-ஆம் தேதி வரை செயல்படும் என அரசு அறிவித்தும், நெல் பிடிக்க சாக்குகள் இருப்பில் இல்லை எனக் கூறி விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்.30-ஆம் தேதி வரை செயல்படும் என அரசு அறிவித்தும், நெல் பிடிக்க சாக்குகள் இருப்பில் இல்லை எனக் கூறி விவசாயிகள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
 மத்திய அரசு ஆண்டுதோறும் பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான அரிசியை, குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வது வழக்கம். மத்திய அரசு அறிவித்த தொகையுடன் மாநில அரசின் பங்காக ஊக்கத் தொகையை தமிழக அரசு அறிவிக்கும். மத்திய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நேரடியாக நெல் கொள்முதல் செய்வது நடைமுறையில் உள்ளது.
 மத்திய அரசு உத்தரவுப்படி நெல் கொள்முதல் செய்யும் நடைமுறை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி தொடங்கி, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறும். இதன் அடிப்படையில், தமிழகத்தின் டெல்டா பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றி கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி மூடப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன.
 தற்போது குறுவை சாகுபடி அறுவடைப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வருகிற செப்.30-ஆம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என அறிவித்தது.
 இந்த அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் மூடப்பட்ட அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் செப். 1-ஆம் தேதி முதல் செயல்படும் எனவும், குறுவை சாகுபடி விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். மேலும், கடலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே செயல்பட்ட 49 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுடன் கூடுதலாக 5 கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதியளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். ஆனால், நெல் பிடிக்க சாக்கு இல்லை எனக் காரணம் கூறி கொள்முதல் பணிகள் உரிய முறையில் நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது.
 இதுகுறித்து கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பெ.ரவீந்திரன் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் டெல்டா பாசன பகுதி, டெல்டா அல்லாத பாசன பகுதிகளில் தொடர்ச்சியாக சாகுபடி பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால், மாவட்டத்தில் தொடர்ச்சியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டியதை கருத்தில்கொண்டு கூடுதலாக சாக்குகளை கையிருப்பில் வைத்திருப்பது வழக்கம். ஆனால், மாவட்ட நெல் கொள்முதல் நடைமுறையை அறிந்திராத நுகர்பொருள் வாணிபக் கழக கடலூர் மாவட்ட அலுவலர்கள், உயர் அதிகாரியின் வாய்மொழி உத்தரவால் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 3 லட்சம் சாக்குகளை அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் சாக்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நெல் பிடிக்காமலும், அனுமதியளித்த கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்காமலும் தாமதம் செய்கின்றனர். விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வேதனை அடைந்துள்ளனர்.
 எனவே, கடலூர் மாவட்டத்துக்கு தேவையான சாக்குகளை தருவித்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முழுவீச்சில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். குறுவை சாகுபடி நெல்லை முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com