"ரேஷன் கடைகளை கணினிமயமாக்க வேண்டும்'

முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகனை கணினி மயமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகனை கணினி மயமாக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.
 இதுகுறித்து அவர் கடலூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 33 ஆயிரம் நியாய விலைக் கடைகளும், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 1,500 கடைகளும் செயல்பட்டு வருகின்றன.
 ஆனால், நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் கடைகளில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படுவதில்லை. அதேபோல ஓய்வூதியமும் வழங்கப்படுவதில்லை. அரசு நிர்வாகம் நியாயவிலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்களை வழங்காமல் 50 கிலோ அரிசி மூட்டைக்கு சுமார் 5 கிலோ வரை எடை குறைவாக வழங்குகிறது.
 மேலும், குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருள்கள் வழங்கப்படுவதில்லை. இதுபோல, நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளால் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் உரிய முறையில் பொருள்களை வழங்க முடியாமல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் திணறி வருகின்றனர்.
 எனவே, ரேஷன் பொருள்களை பொட்டலங்களாக வழங்க வேண்டும். நியாய விலைக்கடை பணிகள் முழுமையாக கணினி மயமாக்கப்பட வேண்டும். குடும்ப அட்டைகளை பயோமெட்ரிக் அட்டைகளாக வழங்க வேண்டும்,.சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரைற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரேஷன் கடை ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (செப்.14) கடலூர் நகர அரங்கில் நடைபெறும் ஆயத்த மாநாட்டில் காலவரையற்ற போராட்ட தேதி அறிவிக்கப்படும் என்றார் அவர்.
 பேட்டியின் போது நியாயவிலைக் கடைபணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ஜி.ஜெயச்சந்திரராஜா, மாநில துணைத் தலைவர் துரை.சேகர், அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com