பள்ளிகளில் நெகிழிப் பொருள்களுக்கு தடை

கடலூர் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு தடை அமலுக்கு வந்துள்ளதாக கல்வித் துறை அறிவித்துள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களுக்கு தடை அமலுக்கு வந்துள்ளதாக கல்வித் துறை அறிவித்துள்ளது. 
தமிழகத்தில் வருகிற 2019-ஆம் ஆண்டு முதல் மறு சுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத, 40 மைக்ரானுக்கு கீழுள்ள நெகிழிப் பொருள்களை பயன்படுத்த தமிழக அரசு தடைவிதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், கல்வித் துறை இந்தப் பணிகளை உடனடியாக தொடங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான பள்ளிகளிலும் நெகிழிப் பொருள்களுக்கான  தடை விழிப்புணர்வு தொடர்பாக தலைமையாசிரியர்கள் அளவில் கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளிகளில் நெகிழிப் பொருள்கள் மீதான தடையை முன்கூட்டியே அமல்படுத்தவும் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, கடலூர், சிதம்பரம், வடலூர், விருத்தாசலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து வகையான 2, 223 பள்ளிகளிலும் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், மாவட்டம் முழுவதிலும் உள்ள 5 லட்சம் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.  முதல்கட்டமாக மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர், தங்களது பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வருகிற 17-ஆம் தேதி முதல் நெகிழிப் பைகள், நெகிழியிலான தண்ணீர் புட்டிகள், உணவுப் பெட்டிகள், நெகிழி பையில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை கொண்டு வருவதற்கு தடை விதித்து கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மற்றும் செல்லிடப்பேசிகள் மூலம் தகவல் அனுப்பியுள்ளன.  
இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர் க.பழனிசாமி கூறியதாவது: அனைத்துப் பள்ளிகளிலும் நெகிழிப் பொருள்களுக்கு தடை அமலுக்கு வந்துள்ளது. கல்வி பயன்பாடுகளிலும் நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டு, அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
பள்ளி வளாகங்களில் ஏற்கெனவே தேங்கியுள்ள நெகிழி 
குப்பைகள், கழிவுகளை  விரைவில் அப்புறப்படுத்தவும், ஒவ்வொரு பள்ளியும் நெகிழி பயன்படுத்தாத பள்ளி என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதனை உறுதிசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தடையை சிறப்பாக அமல்படுத்தும் பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைத்து  பள்ளிகளிலும் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com