காவிரி நீருக்கு காத்திருக்கும் காரைக்கால் விவசாயிகள்!

சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்குமா என காரைக்கால் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்குமா என காரைக்கால் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி காத்துள்ளனர்.

 புதுச்சேரி மாநிலத்தின் 4 பிராந்தியங்களில் ஒன்றாக காரைக்கால் மாவட்டம் விளங்குகிறது. காவிரியின் டெல்டா மாவட்டமான நாகப்பட்டினத்தை ஒட்டி உள்ள காரைக்கால் ஒரு காலத்தில் நெல் சாகுபடிக்கு பெயர் பெற்று விளங்கியது. காவிரி நீர் தடையின்றி கிடைத்து வந்ததால் முப்போக சாகுபடியும் நடைபெற்றது.
 காரைக்கால் பகுதிக்கான காவிரி நீர் குறித்து பிரஞ்சு-பிரிட்டிஷ், மைசூர் அரசுக்குமிடையே 1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 6 டி.எம்.சி காவிரி நீரை பிரஞ்சு அரசு காரைக்கால் பகுதிக்கு பெற்று தந்ததன் காரணமாக  சுதந்திரத்துக்கு முன்பு முப்போக சாகுபடி காரைக்காலில் நடந்து வந்தது.

 காவிரியில் நீர் திறக்கப்பட்டாலும் கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு தண்ணீர் வந்து சேருமா என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேட்டூரில் திறக்கப்படும் நீர், கல்லணையிலிருந்து பிரிந்து தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக காரைக்காலை சென்றடையும்.
 காரைக்காலின் மொத்த விவசாயமும் காவிரி ஆற்றின் நீரையே நம்பி உள்ளது. திருச்சி கல்லணையிலிருந்து காவிரி நீர், காரைக்காலில் உள்ள அரசலாறு, வாஞ்சியாறு, திருமலைராயன் ஆறு வழியாக செல்கிறது. காரைக்கால் கிளை ஆறுகள் வழியாக தண்ணீர் நிரம்பி நூலாறு வழியாக நல்லம் பல் ஏரிக்கு நீர் வருகிறது  இந்த நீர் விவசாயத்துக்கு போதுமானதாக இல்லை என ஏற்கெனவே புகார் எழுந்துள்ளது.


காரைக்காலில் 35ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தது மாறி, இப்போது வெறும் 10 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்குத்தான் செய்யமுடிகிறது. ஏற்கெனவே குறுவை சாகுபடி முற்றிலும் பொய்த்து விட்ட நிலையில் சம்பா சாகுபடியாவது நல்லபடி நடக்குமா என விவசாயிகள் எதிர் நோக்கியுள்ளனர்.

காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி புதுச்சேரி மாநிலத்துக்கு காவிரியில் 6 டிஎம்சி நீர் திறந்து விடப்பட வேண்டும். ஆனால், ஆண்டுதோறும் அதற்கு மிகவும் குறைவான அளவே நீர் பெறப்பட்டுள்ளது.

 எனவே சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு காவிரி பாசன நீர் கிடைக்க தமிழக அரசோடு புதுவை அரசு பேசி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி காரைக்காலுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய 6 டி.எம்.சி. தண்ணீரை பெற வேண்டும். எனவே, பங்கு நீரை பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசுடன் புதுவை முதல்வர்  பேச்சுவார்த்தை நடத்துவார்: அமைச்சர்

காவிரி நீரில் காரைக்கால் பகுதிக்கான பங்கு நீரைப் பெற தமிழக அரசுடன் புதுவை முதல்வர் நாராயணசாமி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அமைச்சர் இரா.கமலக்கண்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகளில் ஒருவரும், வேளாண்துறை அமைச்சருமான இரா.கமலக்கண்ணன் கூறியதாவது:

ஆண்டுதோறும் காரைக்காலுக்கு காவிரி நீர் முழுமையாக கிடைப்பதில்லை. கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் கும்பகோணம் அருகே பிரிந்து காரைக்காலுக்கு வருகிறது.

தற்போது வெறும் 10 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே விவசாயம் நடந்து வருகிறது. வேளாண் பணிகளு க்காக 96 சமுதாய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. அவற்றில் 17 மூடப்பட்டு விட்டன. மீதமுள்ள 76 கிணறுகளில் 67 மட்டுமே செயல்படுகின்றன. இவற்றின் நீர் கூட சிறிய ரக வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. காவிரியில் நீர் திறப்பதை கர்நாடக அரசு முற்றிலும் நிறுத்தி விட்டது. எனினும், தமிழக அரசு டெல்டா மாவட்டங்களுக்காக கல்லணையில் இருந்து காவிரி நீரை திறந்து விட்டுள்ளது. அதில் நமது பங்கு நீர் வந்து சேருமா என காத்திருக்கிறோம். இதுகுறித்து முதல்வரும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றார் கமலக்கண்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com