கடமை தவறும் காவல் துறையினர் மீது நடவடிக்கை: முதல்வர்

கடமை தவறும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்தார்.

கடமை தவறும் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்தார்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், காவல் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுவை முதல்வர் வி.நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜஹான், கந்தசாமி, கமகலக்கண்ணன், டி.ஜி.பி. கவுதம், ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர்கள் கவாஸ், ராஜீவ் ரஞ்சன், காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர், முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கூட்டத்தில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. புதுவையில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. மக்கள் மத்தியில் காவல் துறை மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும். அதற்காக காவல் துறையினர் சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, கள்ள லாட்டரியை ஒழித்துள்ளனர். கஞ்சா புழக்கம் தடுக்கப்பட்டுள்ளது. பாலியல் தொழிலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காகக் காவல் துறையினரைப் பாராட்டவேண்டும்.
கடமை தவறும் காவல் துறையினர் மீது நடவடிக்கை: கடந்த 2 நாள்களுக்கு முன், வேலழகன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதனால், அந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்கு பெரும் இடையூறுகள் விளைவிக்கப்பட்டன. ரெளடிகள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, மக்களையும், தொழிற்சாலை அதிபர்களையும் மிரட்டும் நிலை உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
காவல் துறையில் ஊழலுக்கு இடமில்லை. அதிகாரிகள் முனைந்து கடமையைச் செய்ய வேண்டும். தொடர்ந்து ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கும், அவர்களது உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக 2 மாதங்கள் கழித்து மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அப்போது, காவல் துறையில் சரிவர செயல்படாத, கடமை தவறிய அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் எனக் கூறியுள்ளேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com