காரைக்கால் துறைமுகம் மூலம் ரூ. 49.8 கோடி வருவாய்: முதல்வர் தகவல்

காரைக்கால் துறைமுகம் மூலம் புதுவை அரசுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இதுவரை சலுகை, நில குத்தகைக் கட்டணமாக ரூ. 49.8 கோடி வருவாய் கிட்டியுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

காரைக்கால் துறைமுகம் மூலம் புதுவை அரசுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் இதுவரை சலுகை, நில குத்தகைக் கட்டணமாக ரூ. 49.8 கோடி வருவாய் கிட்டியுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 புதுச்சேரி துறைமுகத் திட்டத்தைக் கொண்டுவர முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆனால், போக்குவரத்து வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சரியான வசதி ஏற்படுத்தாமல் துறைமுகத் திட்டத்தைக் கொண்டுவரக் கூடாது என ஆளுநர் கிரண் பேடி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
 இந்த நிலையில், காரைக்காலில் துறைமுகத்தை நடத்தி வரும் மார்க் நிறுவனம் இந்த நிதியாண்டு முதல் காலாண்டுக்கான (ஏப்ரல் 17 முதல் ஜூன் 17 வரை) வருவாயாக ரூ. 3.14 கோடிக்கான காசோலையை அமைச்சர் கந்தசாமி முன்னிலையில், முதல்வர் நாராயணசாமியிடம் வெள்ளிக்கிழமை வழங்கியது.
 இதனைத் தொடர்ந்து, காரைக்கால் துறைமுகத் திட்டம் குறித்து முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரி அரசு காரைக்கால் துறைமுகத் திட்டத்தை அறிவித்த பிறகு அந்தப் பணியைக் கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் என்ற அடிப்படையில் அனைத்துப் பருவங்களிலும் இயங்கும் ஓர் ஆழ்கடல் துறைமுகமாக உருவாக்க கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த மார்க் என்ற தனியார் நிறுவனத்துடன் சலுகை ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது.
 அந்தத் துறைமுகத்தில் வர்த்தக ரீதியாக சரக்கைக் கையாளும் பணி கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 5 கடற்தளங்கள் வெவ்வேறு கட்டங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில் நிலக்கரி, உரம், சிமென்ட், சர்க்கரை, சமையல் எண்ணெய், திட்டத் தளவாடங்கள், வேளாண் பொருள்கள், சரக்குப் பெட்டகங்கள் உள்ளிட்ட சரக்குகள் கையாளப்படுகின்றன.
 2009-17 ஆம் கால கட்டத்தில் சுமார் 44.95 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 2016-17 இல் மட்டும் 9.10 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. மேலும்,
 2017-18 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2.03 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
 சலுகை ஒப்பந்தத்தின்படி, துறைமுக அபிவிருத்தியாளர் ஆண்டின் மொத்த வருவாயில் 2.6 சதவீதம் புதுச்சேரி அரசுக்குச் சலுகைக் கட்டணமாக செலுத்த வேண்டும். இதை நான்கு தவனைகளாக அரசுக்கு செலுத்த வேண்டும்.
 அதன்படி, நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான வருவாயாக ரூ. 3.14 கோடிக்கான காசோலை செலுத்தப்பட்டது என்றார் அவர்.
 இந்தத் தொகைக்கான காசோலையை அமைச்சர் கந்தசாமி முன்னிலையில், முதல்வர் நாராயணசாமியிடம் துறைமுகத்தின் நிறுவனர் ரெட்டி வழங்கினார்.
 இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, துறைமுகத் துறை செயலர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 நிகழ் ஆண்டுக்கான துறைமுக நில குத்தகைக் கட்டணமாக ரூ. 33.75 கோடி கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் துறைமுகக் கட்டணம் மற்றும் நில குத்தகைக் கட்டணமாக ரூ. 10.03 கோடி கிடைத்துள்ளது. மொத்தமாக கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை காரைக்கால் துறைமுகத் திட்டத்தால் புதுச்சேரி அரசுக்கு சலுகைக் கட்டணம் மற்றும் நில குத்தகைக் கட்டணமாக ரூ. 49.77 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
 காரைக்கால் துறைமுகத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆயிரத்துக்கும் கூடுதலானவர்கள் துறைமுகத்தில் பணிபுரிகிறார்கள். இதன் மூலம் காரைக்கால் பிரதேசத்தின் சமூகப் பொருளாதார நிலை ஏற்றம் கண்டுள்ளது. மேலும், தொழில் துறையும் முன்னேறும் சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com