நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கத்தினர் பேரணி

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.
 இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பேரணியில் பங்கேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
 முன்னதாக, இந்திய மாணவர் கள் சங்கம் சார்பில், பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து அண்ணாசிலை அருகே ஒன்று கூடினர்.
 பின்னர், அவர்கள் அங்கிருந்து நேரு வீதி வழியாகப் பேரணியாகச் சென்று, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். தலைமைத் தபால் நிலையம் அருகே வந்த மாணவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
 இதைத் தொடர்ந்து, மாணவர்கள் அங்கேயே அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், மாணவர்களின் எதிர்கால கல்வியைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
 பின்னர், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முதல்வர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டுக் கலைந்து சென்றனர். பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைத் தொடர்ந்து தற்போது நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 மனு: நீட் தேர்வில் இருந்து புதுவை மாணவர்களுக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மனு அளிக்கப்பட்டது. இந்திய மாணவர் சங்கம் அதன் மாநில நிர்வாகிகள் ஆ.ஆனந்து, ப.பாபு ஆகியோர் அளித்த மனு:
 மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவில் தகுதித் தேர்வு முறையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனால், புதுச்சேரியை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவும், தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான சமூக நீதியும் சிதைக்கப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி மாநிலத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்களித்திட வேண்டும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய 50 சதவீத இடங்களைப் பெறுவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கடந்த 2016 -ஆம் ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 283 இடங்கள் அரசு ஒதுக்கீடாகப் பெறப்பட்டன. நிகழ் கல்வியாண்டு (2017) புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3 கல்லூரிகள் மட்டுமே புதுச்சேரி அரசு ஒதுக்கீடாக 165 இடங்களை வழங்கியுள்ளன.
 மேலும், 4 நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாகப் பெறப்பட்ட இடங்களை மத்திய அரசு பறித்துவிட்டது.
 நிகழ் கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய 118 இடங்களைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை 2013 -ஆம் ஆண்டே நாடு முழுவதும் உள்ள தரமில்லாத 44 நிகர்நிலைப் பல்கலை.களின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. தற்போது புதுச்சேரியில் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்று கூறும் மருத்துவக் கல்லூரிகளும் இதில் அடங்கும்.
 ஆகவே, புதுச்சேரி மாநிலத்துக்குப் பயன்தராத, புதுச்சேரி மாணவர்களுக்கு இடமளிக்காத இத்தகைய நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மாநில அரசு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், சுகாதாரத் துறை அமைச்சகம், இந்திய மருத்துவ கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றுக்கும் பரிந்துரைக்க வேண்டும்.
 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com