மக்களின் கருத்தை அறியாமல் அரசு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது

எந்த விஷயத்திலும் மக்களின் கருத்தை அறியாமல் அரசு முடிவெடுக்கக் கூடாது என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.

எந்த விஷயத்திலும் மக்களின் கருத்தை அறியாமல் அரசு முடிவெடுக்கக் கூடாது என, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
 இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: புதுச்சேரி மக்களுக்கு நடப்பவை அனைத்தையும் அறிந்து கொள்ளும் உரிமை உண்டு. நான் தாற்காலிகமாக இருக்கப்போகும் நபர்தான். ஆனால், புதுச்சேரி நிரந்தரமானது. எனவே, எனது கடமையைத் தொடர்ந்து செய்வேன்.
 நான் பொறுப்பேற்றது முதல் வளமான புதுச்சேரிக்காக இணைந்து பாடுபடுவோம் எனக்கூறி வருகிறேன். ஆனால், இங்கு நிலைமை வேறாக உள்ளது. இதனால்தான் சில முறைகளைச் சீராக வைப்பதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
 அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதனால், அவற்றின் பலம், பலவீனங்கள் தெரிந்தன. மேலும், கடந்த ஓராண்டுக்கு முன்பே துறைமுகத் துறையின் நிலை குறித்தும் கூறப்பட்டு வருகிறது.
 ஆனால், எதுவும் மாறவில்லை. மாறாக, நேரம்தான் வீணாகிவிட்டது.
 நிர்வாகி என்ற முறையில் தவறுகள், குறைபாடுகளைச் சீராக்க வேண்டியது எனது கடமை. இதுகுறித்து ஊடகங்கள், புதுவை மக்கள், மாநில, மத்திய அரசுகளுக்கும் தெரிவித்துள்ளேன்.
 தற்போது, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முன்பு இந்த விவகாரம் உள்ளது. நேர்மையான முடிவுகள் இனிமேல் எடுக்கப்படும் என நம்பலாம். மக்களின் பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசுதான்.
 அரசின் தவறான முடிவோ அல்லது சரியான முடிவோ எதுவாக இருப்பினும் அது மக்களின் வாழ்க்கையை மாற்றிவிடும்.
 எனவே, எந்த விஷயமாக இருந்தாலும் மக்களின் கருத்துகளையும் அறிந்த பின்னர்தான் அரசு முடிவெடுக்க வேண்டும். விவாதம், ஆலோசனைகள் இன்றி முடிவெடுத்தல் கூடாது என்றார் கிரண் பேடி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com