போலி ரசீதுகள் மூலம் பண மோசடி: போலீஸார் விசாரணை

போலி ரசீதுகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போலி ரசீதுகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இளைஞர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு கடன் தொகை வசூலிக்கும் பணியை சாரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (34) செய்து வந்தார். இவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்குச் சென்று தற்போது நிறுவனம் ஒரு சலுகையை அறிவித்துள்ளது, அதன்படி உங்களது கடன் தொகையில் 75 சதவீதத்தைக் கொடுத்தால் போதும் முற்றிலும் ரத்தாகிவிடும் எனத் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய பலர் ரூ. 15 லட்சம் வரை அந்த நிதி நிறுவனத்திடம் வாங்கியிருந்த கடன்களில் 75 சதவீதத்தை நாகராஜியிடம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் பணத்தைப் பெற்றதற்கான போலி ரசீதுகளையும் நாகராஜ் வழங்கியுள்ளார்.
இதையடுத்து, அந்த ரசீதுகளை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட அந்த நிதி நிறுவனத்துக்குச் சென்று தாங்கள் முழு கடனை அடைத்ததற்கான பத்திரத்தை தரும்படி பணம் பெற்றவர்கள் கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி மேலாளர் சரவணன் பெரியக்கடை போலீஸில் நாகராஜ் மீது புகார் அளித்தார். ஆனால், போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லையாம்.
இதையடுத்து, சரவணன் புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரவணன் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு பரிந்துரை செய்தது.
இதன்படி, பெரியக்கடை போலீஸார் நாகராஜ் மீது மோசடி, ஏமாற்றுதல், போலி பத்திரங்கள் தயாரித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com