வங்கி ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: ரூ.4.5 லட்சம் தப்பியது

புதுச்சேரியில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் திருட்டு முயற்சியின்போது பணம் இருக்கும் பகுதி மட்டும் தானாக பூட்டிக்கொண்டதால் ரூ.4.5 லட்சம் தப்பியது.

புதுச்சேரியில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் திருட்டு முயற்சியின்போது பணம் இருக்கும் பகுதி மட்டும் தானாக பூட்டிக்கொண்டதால் ரூ.4.5 லட்சம் தப்பியது.
 புதுச்சேரி பாரதி வீதி சுப்பையா சாலை சந்திப்பில் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ரூ.4.5 லட்சம் நிரப்பப்பட்டது.
 இந்த நிலையில், புதன்கிழமை காலை இந்த மையத்தில் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் பண இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 இதுகுறித்து அவர் ஒதியஞ்சாலை காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். காவல் உதவி ஆய்வாளர் கீர்த்தி மற்றும் போலீஸார் வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் கடப்பாரைகொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்திருந்தது தெரியவந்தது.
 உடனே வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 அதிகாரிகள் வந்து பார்த்தபோது பணம் ஏதும் திருடு போகவில்லை என்பது தெரிந்தது. போலீஸார் கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது அதன் வயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இரவு 10 மணியளவில் வந்த மர்ம நபர்கள் முதலில் கண்காணிப்பு கேமராவின் இணைப்புகளை துண்டித்துள்ளனர். பின்னர் கடப்பாறையால் இயந்திரத்தை உடைக்க முயன்றபோது பணம் இருக்கும் பகுதி தானாக பூட்டிக்கொண்டுள்ளது.
 இதனால் அவர்கள் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இதனால் ரூ.4.5 லட்சம் தப்பியது. இந்த ஏடிஎம் மையத்தில் காவலாளிகள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com