"சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை வெளியேற்றக் கூடாது'

புதுச்சேரி சென்டாக் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட 56 மாணவர்களை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியேற்றக் கூடாது என

புதுச்சேரி சென்டாக் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்ட 56 மாணவர்களை தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியேற்றக் கூடாது என இந்திய மருத்துவக் கழகத்துக்கு புதுவை அரசு பரிந்துரைத்தது.
 இதுகுறித்து புதுவை மாநில நலவழித் துறை சார்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 இந்திய மருத்துவக் கழகமானது புதுச்சேரியில் இயங்கி வரும் மூன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பட்ட மருத்துவக் கல்விக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1997-இன்படி, 2017-18 ஆம் கல்வியாண்டில் மருத்துவப் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்ட 105 மாணவர்களை விடுவிக்க கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.
 இந்திய மருத்துவக் கழகத்தின் இந்த வெளியேற்ற நடவடிக்கையானது, தனியார் மருத்துவக் கல்லூரிகளால் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர்கள், சென்டாக் வழங்கிய பட்டியலில் இல்லாததன் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும்.
 இந்திய மருத்துவக் கழகத்தின் இந்த அறிவுறுத்தலை புதுவை பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் தமிழ்நாடு மாநில மருத்துவக் கழகத்தின் கவனத்துக்கு புதுவை அரசு தெரிவித்தது.
 இந்திய மருத்துவக் கழகமானது ஸ்ரீ வெங்டேஸ்லரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - ஆராய்ச்சி மையத்தில் இருந்து சென்டாக் வழங்கிய 56 மாணவர்களை (55 அரசு ஒதுக்கீடு மற்றும் ஒரு நிர்வாக ஒதுக்கீடு) வெளியேற்றும்படி தவறுதலாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 சென்டாக் வழங்கிய இந்த 56 மாணவர்கள் தொடர்பான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகத்தை புதுவை அரசு அணுகியுள்ளது. மேலும், இந்திய மருத்துவக் கழகத்திடம் இருந்து அடுத்த ஆணை (அ) கடிதம் வரும் வரை மாணவர்களை வெளியேற்றாமல் இருக்க அந்தத் தனியார் கல்லூரிக்கு புதுவை அரசு அறிவுறுத்தியுள்ளது.
 எனவே, இந்த 56 மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக வதந்திகள் பரப்பப்பட்டால் அதை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு புதுவை நலவழித் துறை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com