ஆளுநர் செல்லும் இடங்களில் இடையூறு செய்ய வேண்டாம்: கட்சியினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செல்லும் பொது இடங்களில் அவருக்கு இடையூறு செய்ய வேண்டாம் என காங்கிரஸ் கட்சியினருக்கு முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.

துணைநிலை ஆளுநர் கிரண் பேடி செல்லும் பொது இடங்களில் அவருக்கு இடையூறு செய்ய வேண்டாம் என காங்கிரஸ் கட்சியினருக்கு முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தினார்.
 ஆளுநருக்கும், ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆளுநரை தங்களது தொகுதிகளில் மறித்து போராட்டம் நடத்துங்கள் என முதல்வர் நாராயணசாமி சட்டப்பேரவையில் கூறியிருந்தார்.
 இந்த நிலையில், கிரண் பேடி சென்ற சில இடங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
 இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.
 முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் பார்வையாளர் சுரேஷ் ஷெட்டி முன்னிலை வகித்தார். தேர்தல் வாக்குப்பதிவு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, லபோர்த் வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் திமுக எம்எல்ஏக்களைச் சந்தித்து காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு வாக்களிக்க நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திரா நகர் தொகுதியில் ஆளுநர் கிரண் பேடிக்கு காங்கிரஸ் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது குறித்து கேட்டபோது முதல்வர் நாராயணசாமி பதிலளிக்கையில்,
 துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பொது இடங்களுக்குச் செல்லும் போது அவருக்கு யாரும் இடையூறு செய்ய வேண்டாம். விதிகளை மீறி செயல்பட்டதால் தான் கிரண் பேடிக்கு எதிராக ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அது தொடரும்.
 மேலும், பசு பாதுகாப்போர் என யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என பிரதமர் அடிக்கடி கூறி வந்தாலும் தொடர்ந்து இதுபோன்ற வன்முறைகள் நடைபெற்றுத்தான் வருகின்றது என்றார் நாராயணசாமி.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com