பொது சுகாதார செவிலியர்களுக்கு பயிற்சி தர ஜிப்மர் திட்டம்

பொது சுகாதார செவிலியர்களுக்கு அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்க காரைக்கால் ஜிப்மர் கிளை மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

பொது சுகாதார செவிலியர்களுக்கு அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி அளிக்க காரைக்கால் ஜிப்மர் கிளை மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.
 அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கை இல்லாத நிலை நீடித்து வருகிறது. அதிகளவில் பணியாளர்களை நியமித்தாலும் மக்களுக்கு தரமான சிகிச்சையை உரிய நேரத்தில் அளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், மருத்துவர்கள் இல்லாத இடங்களில் செவிலியர்கள் மூலம் சில சிகிச்சை அளிக்கப்படும் நிலை உள்ளது. குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் சில நோய்களுக்கு செவிலியர்களே நேரடியாக மருந்துகளை பரிந்துரைக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
 தேசிய சுகாதாரக் கொள்கை - 2017 (என்.எச்.பி-17) வெளிவந்துள்ளது. எல்லாருக்கும் அடிப்படையான மருத்துவ சேவையையும், மருந்துகளையும் எல்லா இடங்களிலும் கிடைக்கச் செய்வது போன்ற பல குறிக்கோள்களைக் கொண்டதாக இந்தக் கொள்கை அமைந்துள்ளது.
 இந்தப் புதிய கொள்கையின்படி செவிலியர் பயிற்றுநர்கள் என்ற தனிப் பிரிவை ஏற்படுத்தி, அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து சுதந்திராக ஆரம்ப நிலையிலான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும், மருந்துகளை பரிந்துரைக்கவும் அனுமதி தர திட்டமிடப்பட்டுள்ளது.
 கிராமப்புற மற்றும் அணுக முடியாத பகுதிகளில் மருத்துவர்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால், இந்த முயற்சியை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன்மூலம் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை மற்றும் மருந்துகள் கிடைப்பது உறுதி செய்ய முடியும்.
 குறிப்பாக, கிராமப் பகுதி மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்காத நிலை உள்ளது. 25 சதவீதம் மக்கள் அணுகமுடியாத இடங்களில் வசித்து வருவதால் மருத்துவர்கள் தட்டுப்பாடு உள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு சிகிச்சை தருவது என்பது சவாலான பணியாக உள்ளது.
 இதுதொடர்பாக ஜிப்மர் தலைவர் மருத்துவர் எம்.கே.பான் கூறியதாவது:
 மத்திய அரசின் இந்த முயற்சி தைரியமான முடிவாகும். தற்போது நிலவும் சூழலில் இந்தத் திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் கீழ் பட்டதாரி செவிலியர்களுக்கு 6 மாதங்கள் திறன்மேம்பாட்டுப் பயிற்சி தரப்படும். பின்னர் அவர்கள் துணை சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்படுவர். முதலில் 2.5 சதவீதம் பேரை இதுபோன்ற துணை சுகாதார நிலையங்களில் நியமிக்கவும், அவற்றை சுகாதார நல மையங்களாக மாற்றவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மையங்களில் நோயாளிகள் சென்று சிகிச்சை பெற முடியும்.
 ஜிப்மர் மருத்துவமனை இதற்காக செவிலியர்கள், பட்டதாரி செவிலியர்களுக்கான பாடத் திட்டத்தை வடிவமைத்து வருகிறது. மாநில அரசுகள் செவிலியர்களுக்கு இதை பயன்படுத்துவது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஜிப்மர் காரைக்கால் மூலம் பொது சுகாதார செவிலியர்களுக்கு இந்தப் பயிற்சியை அளிக்க உள்ளோம்.
 மத்திய அரசு சுகாதாரத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 1.9 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளின் சேவைகளை ஒருங்கிணைக்க அரசு திட்டமிட்டுள்ளது
 என்றார் எம்.கே. பான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com