பிரசவித்த பெண், 2 பெண் குழந்தைகள் சாவு: மருத்துவமனை முற்றுகை

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பிரசவித்த பெண்ணும், இரு பெண் குழந்தைகளும் உயிரிழந்ததாகக் கூறி, அவர்களது உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பிரசவித்த பெண்ணும், இரு பெண் குழந்தைகளும் உயிரிழந்ததாகக் கூறி, அவர்களது உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 புதுச்சேரி முத்தரையர் பாளையத்தைச் சேர்ந்தவர் தவசி. கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்தார். இவரது மகள் திவ்யா (24).
 பொறியியல் பட்டதாரியான இவருக்கும், திண்டுக்கல்லைச் சேர்ந்த விக்னேஷுக்கும் ( 27) 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 விக்னேஷ் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். குழந்தை இல்லாத காரணத்தினால் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என இருவரும் முடிவு எடுத்தனர்.
 இதைத் தொடர்ந்து, புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக சிகிச்சை மேற்கொண்டனர்.
 தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திவ்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
 இதையடுத்து, அவர் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு திவ்யாவுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி திவ்யா உயிரிழந்தார்.
 சில நிமிஷங்களிலேயே 2 குழந்தைகளும் அடுத்து அடுத்து உயிரிழந்தன.
 இதுகுறித்து அறிந்த திவ்யாவின் உறவினர்கள் மருத்துவமனையின் கவனக்குறைவால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த நிலையில், திவ்யா மற்றும் குழந்தைகளின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் மீண்டும் மருத்துவமனையை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அவர்களிடமும், மருத்துவர்களிடமும் லாஸ்பேட்டை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, திவ்யாவின் உறவினர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com