விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி புதுவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்

விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுவையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுவையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
 நாட்டில் தற்போது விவசாயமும், விவசாயிகளும் எப்போதும் இல்லாத வகையில் நெருக்கடியில் சிக்கி உள்ளனர். உற்பத்திக்கு நியாயமான விலையின்மை, இயற்கை சூழலால் ஏற்படும் பாதிப்புகள், நீர்ப்பாசன பற்றாக்குறை, வங்கிகள் கெடுபிடி, மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் போன்றவற்றால் நாள் ஒன்றுக்கு சராசரியாக 35 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
 விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, தேசிய, கூட்டுறவு வங்கிகள், தனியார் நிறுவனங்களில் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும், 60 வயது நிறைவடைந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கைவினைஞர்களுக்கு ஓய்வூதியம் ரூ.10,000 தரவேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும், விதை, உரம், பூச்சி மருந்து, டீசல் விலையை குறைக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ரூ.ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 24-ஆம் தேதி புதுவை, காரைக்காலிலும், 25-ஆம் தேதி பாகூரிலும், 26-ஆம் தேதி வில்லியனூரிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
 அதேபோல புதுவை, காரைக்காலில் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை பாலாஜி திரையரங்கில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றனர்.
 அப்போது, தலைமை தபால் நிலையம் அருகே போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே மறியல் செய்தனர். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நாரா.கலைநாதன், விஎஸ்.அபிஷேகம், கே.முருகன், சலீம், கீதநாதன், விவசாயிகள் சங்கம் சார்பில் கெüரவத் தலைவர் மாசிலாமணி, துணைப் பொதுச் செயலாளர் வி.கலியமூர்த்தி, துணைத் தலைவர் அ.பெருமாள், செயலாளர் ராமச்சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
 சாலை மறியலில் ஈடுபட்டதாக 70 பெண்கள் உள்பட 250 பேரை போலீஸார் பின்னர் கைது
 செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com