பாகூரில் இரு தரப்பினரிடையே மோதல்: கடைகள் அடைப்பு: போலீஸார் குவிப்பு

புதுச்சேரி மாநிலம் பாகூரில் காதல் விவகாரம் தொடர்பாக இரு பிரிவினரிடையே புதன்கிழமை பயங்கர மோதல் ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலம் பாகூரில் காதல் விவகாரம் தொடர்பாக இரு பிரிவினரிடையே புதன்கிழமை பயங்கர மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பதற்றான சூழல் நிலவுவதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.
 பாகூர் காமராஜர் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
 இதனிடையே, அந்தப் பெண்ணும், அதே பகுதியில் வசிக்கும் வேறொரு சமூகத்தைச் சார்ந்த இளைஞரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் பரவியது. இது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.
 இந்த நிலையில் பாகூர் பேட் பகுதியைச் சேர்ந்த சிலர், ஊர் பகுதியைச் சேர்ந்த ஒருவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
 இது குறித்து அவர்கள் தனித்தனியே புகார் தெரிவிக்க பாகூர் காவல் நிலையத்துக்கு புதன்கிழமை சென்றனர்.
 இதையறிந்து இரு பிரிவினரும் அங்கு திரண்டதால், மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதுகுறித்து அறிந்த பாகூர் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம், சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தினர்.
 இதில் ஒரு பிரிவினர் கலைந்து போக மறுத்து பாகூர்-கன்னிக்கோவில் சாலை வேப்ப மரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.
 அப்போது, பாகூர் பேட் பகுதியைச் சேர்ந்த விஜயபிரதாப் (28) தனது தாய் மஞ்சுளாவை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார். இதனைக் கண்ட மறியலில் ஈடுபட்டிருந்தோர் தாயுடன் வந்த விஜயபிரதாப்பை வழிமறித்து தாக்கினர்.
 தடுக்க வந்த அவரது தாயையும் தாக்கினர். அவர் வந்த மோட்டார் பைக்கையும் அடித்து உடைத்தனர். மேலும், ஆவேசமடைந்த சிலர், அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாரின் தடியைப் பிடுங்கி விஜயபிரதாப் மற்றும் அவரது தாயை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் காயமடைந்த இருவரையும் போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 விஜயபிரதாப் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அறிந்த அவரது தரப்பினர் ஆயுதங்களுடன் திரண்டதால், மீண்டும் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
 தெற்குப் பகுதி எஸ்பி அப்துல் ரகீம், இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், பாபுஜி உள்ளிட்ட போலீஸார் விரைந்து சென்று இரு பிரிவினரையும் விரட்டியடித்தனர்.
 கடைகள் மூடல்: இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு கும்பல் விடுத்த மிரட்டலையடுத்து, பாகூரில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. அங்கு பதற்றான சூழல் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com