மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கை முறைகேடுகள்: தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறித்து விசாரிக்க சிபிஐக்கு ஆளுநர் பரிந்துரை

மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடுகள், புகார்கள் எதிரொலியாக புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள்,

மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையில் முறைகேடுகள், புகார்கள் எதிரொலியாக புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், சென்டாக் செயல்பாடுகள் குறித்து, உடனே விசாரணை நடத்த வேண்டும் என சிபிஐக்கு ஆளுநர் கிரண் பேடி பரிந்துரைத்தார்.
 இதுதொடர்பாக ஆளுநர் கிரண் பேடி தெரிவித்திருப்பதாவது:
 மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. இவை மிகவும் தீவிரமானவையாக உள்ளன. இதில் மிகப் பெரிய அளவில் முறைகேடு, நம்பிக்கை துரோகம், ஊழல் நடந்துள்ளன. எனவே, இதுதொடர்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகள், சென்டாக் அமைப்பின் செயல்பாடுகள் தொடர்பாக சிபிஐ அமைப்பு உடனே விசாரணையை தொடங்க ஆளுநர் அலுவலகம் பரிந்துரைத்துள்ளது.
 மாணவர் சேர்க்கையில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக அவசரமாக விசாரிக்கவும், இதுதொடர்பான ஆதாரங்கள், ஆவணங்களை அழிக்கவிடாமலும், அவற்றை பாதுகாக்கவும் விசாரணையை தொடங்கவேண்டும். இதுதொடர்பான சில முக்கிய ஆவணங்கள் சிபிஐக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தொடர்ந்து அனுப்புவோம்.
 ஏற்கெனவே, அரசு ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்களை சேர்க்குமாறு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொதுநல வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 கலந்தாய்வுக்கு முன்னரே அவர்கள் மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களை விற்றுள்ளது தெரியவந்தது. இதில் கல்லூரிகள் நீதிமன்ற உத்தரவை மீறி உள்ளன.
 எம்சிஐ, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தேர்வான மாணவர்கள் ஒருவருக்குக்கூட இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
 புதுச்சேரி மாநிலம் தற்போது மிகப்பெரிய மருத்துவ இடங்கள் ஒதுக்கீட்டு ஊழலில் சிக்கியுள்ளது. நேர்மையான சுதந்திரமான விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொணர உதவும்.
 இந்தச் சிக்கல், அரசியல், நிர்வாகம், கல்லூரி நிர்வாகங்களின் தவற்றால் ஏற்பட்டவை. இதனால் மாணவர்கள், பெற்றோர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
 அவர்களுக்கு நீதி தேவை. மேலும் ஓராண்டுக் கல்வியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார் கிரண் பேடி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com