தேசிய, சர்வதேச யோகாசனப் போட்டிகளில் வெற்றி பெறுவோர் கெளரவிப்பு: முதல்வர் தகவல்

தேசிய, சர்வதேச யோகாசனப் போட்டிகளில் வெற்றி பெறுவோர் அரசால் கெளரவிக்கப்படுவர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தேசிய, சர்வதேச யோகாசனப் போட்டிகளில் வெற்றி பெறுவோர் அரசால் கெளரவிக்கப்படுவர் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
 ஆண்டுதோறும் ஜூன் 21-ஆ ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் 3}வது ஆண்டாக புதுச்சேரி சுற்றுலாத் துறை, கல்வித் துறை, மாசுக்கட்டுப்பாட்டுக் குழுமம், நலவழித் துறை சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலையில் புதன்கிழமை சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி, கடற்கரை சாலையில் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற யோகா செயல் விளக்கம் நடந்தது. மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்தார். மத்திய அமைச்சர் அக்பர் பேசியதாவது: பிரதமர் மோடியின் முயற்சியால் யோகா உலகெங்கும் சென்றடைந்துள்ளது. உடற்பயிற்சி நிலையத்துக்குச் சென்று பயிற்சி செய்தால் உடல் வலு மட்டுமே அதிகரிக்கும். யோகாவினால் மனம் வலிமையாகும். அமைதி கிடைக்கும். இந்தியாவில் இருந்த யோகாவை தற்போது உலகமே விரும்பி ஏற்றுள்ளது" என்றார்.
 முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: புதுச்சேரி சித்தர்களின் பூமியாக திகழ்கிறது. பலர்
 ஜீவசமாதியடைந்துள்ளனர். பொதுமக்கள் பலரும் யோகாசனக் கலையில் ஆர்வமுடன் உள்ளனர். தற்போது, பிரதமர் மோடியால் நம் நாட்டில் மட்டுமல்லாமல் ஐ.நா. வரை சென்றடைந்துள்ளது. உலகளவில் அங்கீகரித்துள்ளனர். யோகாவில் எனக்கு தனிப்பட்ட ஆர்வமுண்டு. தினமும் நடைப்பயிற்சி செய்வேன். அசைவ உணவு சாப்பிட்டு வந்த நான் யோகாசனத்தால் சைவத்துக்கு மாறினேன். தற்போது இந்த வயதிலும் சோர்வின்றி பணியாற்றுகிறேன். பள்ளிகளில் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் தரப்படும். யோகாவில் சிறப்பிடம் பெற்றால் கல்வியில் முன்னுரிமை தரப்படும்.
 மாநில, தேசிய மற்றும் உலகளவில் யோகா போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெறுவோர் அரசால் கௌரவிக்கப்படுவார்கள்" என்றார். அதைத் தொடர்ந்து மாணவர்களுடன் யோகா பயிற்சியில் முதல்வர் நாராயணசாமி ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி பெற்றார். தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, டிஜிபி எஸ்.கே. கவுதம் ஆகியோரும் யோகா செய்தனர்.
 துறைச் செயலர்கள், இயக்குநர்கள் உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர்.
 ஆளுநருக்கு அழைப்பில்லை: புதுச்சேரி மாநில அரசு சார்பில் நடத்தப்படும் விழா என்பதால் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 ஆனால், தற்போது அரசுக்கும், ஆளுநருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், கிரண் பேடியை அழைக்கவில்லை.
 மத்திய அமைச்சர் அக்பர் பங்கேற்ற நிலையிலும், கிரண் பேடி ஆளுநர் மாளிகையில் தனியாக பொதுமக்கள், மாணவ, மாணவிகளுடன் யோகாசன நிகழ்ச்சிகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com