சட்டத்தை மீறாமல் மக்கள் நலனுக்காக அதிகாரிகள் செயல்பட வேண்டும்: முதல்வர் நாராயணசாமி

அரசு அதிகாரிகள் சட்டத்தை மீறாமல், மக்களுக்காக அவற்றை வளைத்து செயல்படலாம் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.

அரசு அதிகாரிகள் சட்டத்தை மீறாமல், மக்களுக்காக அவற்றை வளைத்து செயல்படலாம் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
 புதுச்சேரி அரசு பொது நிர்வாகத் துறை சார்பில் அரசுத் துறை கண்காணிப்பாளர்கள், சார்பு செயலர்கள் பங்கேற்ற நல்லாட்சி தருவது, சிறந்த நிர்வாகம் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டம் கம்பன் கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்துப் பேசியதாவது:
 சிறிய மாநிலமான புதுவையில் வெளிப்படையான நிர்வாகம், நல்லாட்சி தருவது எளிது. ஆனால், இங்கு அனைத்தும் நேர்மாறாக நடக்கின்றன.
 கோப்புகளை விரைவாக பரிசீலித்து அனுப்புவதற்குப் பதில் குறிப்பு தான் எழுதி அனுப்பும் நிலை உள்ளது.
 முதலில் பணி விதிகள், யூனியன் பிரதேசத்துக்கான வழிகாட்டுதல்கள், அரசியல் சட்டம் போன்றவை குறித்து அதிகாரிகள் நன்றாக படித்தறிய வேண்டும். எந்தெந்த கோப்புகளை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பலாம், முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், செயலர்கள் வரை பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்பதை தெளிவாக அறிய வேண்டும்.
 13 வகையான அம்சங்கள் தவிர அனைத்துக் கோப்புகளையும் துணைநிலை ஆளுநர் அனுமதிக்கு அனுப்பத் தேவையில்லை. ஆட்சியாளர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அவர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும். பதில் கூற கடமைப்பட்டுள்ளோம். குறிப்பாக, அரசு அதிகாரிகளை சட்டத்தை மீறி செய்யும்படி நாங்கள் கூறமாட்டோம். சட்டத்தை மீறாமல், மக்கள் நலனுக்காக அவற்றை வளைத்து அதிகாரிகள் செயல்படலாம்.
 புதுவையில் 12.5 லட்சம் பேர் வசிக்கின்றனர். மொத்தம் ரூ.6625 கோடிக்கு பட்ஜெட் போடப்படுகிறது. மாநிலத்துக்கு மொத்த வருவாய் ரூ.4 ஆயிரம் கோடி மட்டுமே வருகிறது. ரூ.1000 கோடி கடன் வாங்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் திட்டமில்லா மானிய நிதி ரூ.2150 கோடி தராமல் மத்திய அரசு இழுத்தடித்து வருகிறது.
 அரசு நலத் திட்டங்களான முதியோர் ஓய்வூதியம், இலவச அரிசி போன்றவை காலத்தோடு வழங்க முடியாத நிலை உள்ளது. அமைச்சர்கள் பலமணி நேரம் உழைத்தாலும், அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லையென்றால் சிறந்த நிர்வாகத்தை தர முடியாது.
 அதிகாரிகள் மீது பழி வாங்கும் போக்கோடு அரசு செயல்படாது. நானும், அமைச்சர்களும் உங்களுக்கு பாதுகாப்பு அரணாக திகழ்வோம். அரசு நிர்வாகத்தின் தூண்களாக விளங்கும் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் நாராயணசாமி. தலைமைச் செயலர் மனோஜ் பரிதா வரவேற்று பேசியதாவது:
 மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கொள்கை முடிவுகளை அறிவித்தாலும், அதை செயல்படுத்தும் பொறுப்பு அரசு அதிகாரிகளுக்கு உண்டு. மக்களுக்கு அதிகாரிகள் பதில் கூறப்போவதில்லை. அமைச்சர்கள் பதில் கூற வேண்டியுள்ளது.
 தங்கள் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றார்.
 பொது நிர்வாகத் துறை செயலர் கே.சுந்தரவடிவேலு, வளர்ச்சி ஆணையர் நரேந்திரகுமார், டிஜிபி சுனில்குமார் கெüதம் பல்வேறு அரசுச் செயலர்கள், இயக்குநர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com