விவசாயிகள் சாலை மறியல் முயற்சி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூனிச்சம்பட்டில் விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கூனிச்சம்பட்டில் விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியல் செய்ய முயன்றனர்.
 திருக்கனூர் அடுத்த கூனிச்சம்பட்டில் வேளாண் துறை கீழ் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் உள்ளது. தற்போது ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விவசாயிகள் அதிக அளவில் விளை பொருள்களை கொண்டு வருகின்றனர்.
 ஆனால், அங்கு அடிப்படை வசதி இல்லாததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக, நெல், உளுந்து, காராமணி உள்ளிட்டவற்றை கொண்டு வரும் போது, அதற்குத் தேவையான சாக்குப் பைகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருப்பதில்லை. இந்த நிலையில், புதன்கிழமை விவசாயிகள் நெல் மற்றும் உளுந்தை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வந்திருந்தனர். அப்போது, சாக்குப் பைகள் இல்லாததைக் காரணம்காட்டி விளைபொருள்களை கொண்டு செல்லுமாறு ஊழியர்கள் தெரிவித்தனராம். இதனால் ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த திருக்கனூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 பின்னர், மதகடிப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலிருந்து சாக்குப் பைகள் வரவழைக்கப்பட்டு, நெல் மற்றும் உளுந்து கொள்முதல் செய்யப்பட்டன. இதையடுத்து, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com