அறிவியல் மைய கோளரங்கில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி தொடக்கம்

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மைய கோளரங்கில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அப்துல் கலாம் அறிவியல் மைய கோளரங்கில் பாரம்பரிய பொருள்கள் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
 புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்ப மாமன்றம் சார்பில், மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவியல் பயிற்சி முகாம் லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையத்தில் நடந்து வருகிறது.
 கடந்த 3-ம் தேதி தொடங்கிய இந்த முகாம் வரும் 31-ம் வரை நடக்கிறது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.
 இவர்களுக்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம் மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
 முகாமில் சிறப்பு நிகழ்வாக பாரம்பரிய பொருள்கள், பழங்கால நாணயங்கள் மற்றும் ஸ்டாம்ப் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது.
 வரும் 26-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கண்காட்சியில் பண்ருட்டி கவிதை கணேசன் சேகரித்த பாரம்பரிய பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
 மேலும், அரசர் கால நாணயங்கள், நெப்போலியன், திப்புசுல்தான், ஷெர்ஷா மற்றும் கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ராணி வெள்ளி நாணயங்கள், இந்திய நாணயங்களின் வரலாறு ஆகியவை மாதிரிகளுடன் இடம்பெற்றுள்ளன.
 இதுதவிர சுதந்திரம் அடைந்த பின் நாணயங்கள் எந்த அச்சகத்தில் அடிக்கப்பட்டது என்பது வருடங்களுக்குக் கீழ் டயமண்ட், புள்ளி, ஸ்டார் போன்ற குறியீடுகளால் காட்டப்பட்டுள்ளன.
 கையால் எழுதப்பட்ட தந்தி, அச்சு செய்யப்பட்ட தந்தி, 100 வருட புத்தகங்கள், திருக்குறள் புத்தகம், அணா மற்றும் பைசாக்கள், ஸ்டாம்ப் வகைகள், வீரிய ஒட்டு நெல் வகைகள் ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com